3-வது கட்டமாக பிரான்ஸிலிருந்து 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தன

வியாழக்கிழமை, 28 ஜனவரி 2021      இந்தியா
Raphael-flights--2021 01 28

பிரான்ஸ் நாட்டிலிருந்து 3-வது கட்டமாக 3 ரபேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் இரவு இந்தியா வந்து சேர்ந்தன. பிரான்ஸிலிருந்து புறப்பட்ட இந்த விமானங்கள் இடைநில்லாமல், இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன.

இதன் மூலம் கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப் பகுதியில் இந்தியா, சீனா இடையே உரசல் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த ரபேல் விமானங்கள் வருகை மேலும் இந்திய ராணுவத்துக்கு வலு சேர்க்கும். இதன் மூலம் இந்தியா வந்த ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

முதல்கட்டமாக 5 ரபேல் போர் விமானங்களும், 2-வது கட்டத்தில் 3 விமானங்களும், 3-வது கட்டத்தில் 3 விமானங்களும் வந்துள்ளன.  இதுகுறித்து இந்திய விமானப்படை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள செய்தியில், 

பிரான்ஸிலிருந்து 7 ஆயிரம் கி.மீ இடைநில்லாமல் பறந்து, 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவின் ஜாம்நகர் விமானப்படைத் தளம் வந்து சேர்ந்தன.  பிரான்ஸின் இஸ்ட்ரஸ் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு நடுவானில் எரிபொருள் நிரப்ப டேங்கர் விமானங்கள் உதவிய ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரான்ஸின் டிசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தது. 

இந்த ரபேல் போர் விமானம் அதிநவீனத்துடன் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆயுதம் தயாரிப்பு நிறுவனமான மீட்டோர் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களான வானிலிருந்தே இலக்கைக் குறிவைத்துத் தாக்குதல், ஏவுகணை இடைமறித்துத் தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் ரபேல் விமானத்தில் உள்ளன.  ஏற்கெனவே செய்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக 10 ரபேல் விமானங்கள் தயாராக இருந்த நிலையில் அதில் 5 விமானங்கள் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தன. அந்த விமானங்கள் முறைப்படி இந்திய விமானப் படையில் கடந்த செப்டம்பர் மாதம் 10-ம் தேதி இணைக்கப்பட்டன.  கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா-சீனா படைகளுக்கு இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ரபேல் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 2-வது கட்டமாக 3 ரபேல் போர் விமானங்கள் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தன.  முதல்கட்டமாக வந்த ரபேல் போர் விமானங்கள் அம்பாலா விமானப்படைத் தளத்திலும், 2-வதாக வந்த 3 விமானங்கள் மேற்கு வங்கத்தில் உள்ள ஹஸிமரா விமானப்படைத் தளத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து