சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு நிரந்தர தடை

வியாழக்கிழமை, 28 ஜனவரி 2021      இந்தியா
central-government 2020 11 10

சீனாவின் டிக்டாக், விசாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு, மத்திய அரசு நிரந்தர தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் எல்லையில், சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைய முயற்சித்த போது, இந்திய ராணுவத்தினர் சரியான பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் நம் வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.  

இதையடுத்து சீனாவின் டிக்டாக், விசாட் உள்ளிட்ட 59 மொபைல் போன் செயலிகளுக்கு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்தது. இந்த செயலிகள், நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், அனுமதியின்றி தனி நபர் தகவல்களை, வர்த்தக ஆதாயத்திற்கு பயன்படுத்துவதாகவும், குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, செயலி நிறுவனங்கள், இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடந்து வருவதாக கூறி, ஆதாரங்களுடன், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பின. அந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என மத்திய அரசு சீன நிறுவனங்களிடம் தெரிவித்தது.

இந்நிலையில், டிக்டாக், விசாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நிரந்தர தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில், சீனாவின் பப்ஜி உள்ளிட்ட 200 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, பப்ஜி நிறுவனம், பப்ஜி மொபைல் இந்தியா என்ற நிறுவனத்தை துவக்கி, பணியாளர்களை நியமித்தது. இந்திய சட்ட விதிகளை பின்பற்றி பிரத்யேகமான பப்ஜி விளையாட்டு அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கும் மத்திய அரசு அனுமதி தரவில்லை என்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து