முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100-வது டெஸ்டை சென்னையில் விளையாடுவது சிறப்பானது: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்

செவ்வாய்க்கிழமை, 2 பெப்ரவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட். 30 வயதான இவர் இந்தியாவுக்கு எதிராக சென்னையில் வருகிற 5-ந் தேதி தொடங்கும் முதல் டெஸ்டில் புதிய மைல்கல்லை எட்டுகிறார்.

ஜோ ரூட் 99 டெஸ்டில் விளையாடி உள்ளார். சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டி அவருக்கு 100-வது டெஸ்ட் ஆகும். இந்த மைல்கல்லை எட்டும் 15-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெறுகிறார்.

அலஸ்டர் குக் (161 டெஸ்ட்), ஜேம்ஸ் ஆண்டர்சன் (157), ஸ்டூவர்ட் பிராட் (144), அலெக்ஸ் ஸ்டூவர்ட் (133), இயன் பெல் (118), கிரகாம் கூச் (118), டேவிட் கோவர் (117), மைக் ஆதர்டன் (115), காலின் கவுத்திரி (114), பாய்காட் (108), பீட்டர்சன் (104), இயன் போத்தம் (102), ஸ்டராஸ் (100), துரோப் (100) ஆகியோர் வரிசையில் அவர் இணைகிறார்.

100-வது டெஸ்டில் விளையாடுவது குறித்து ஜோ ரூட் கூறியதாவது:-

2012-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நாக்பூர் டெஸ்டில் அறிமுகமானேன். தற்போது 100- வது போட்டியில் இந்திய மண்ணில் விளையாடுவது பெருமையானது. சென்னையில் 100-வது டெஸ்டில் ஆடுவது மிகவும் சிறப்பானது.

இந்திய அணி வலுவானது. மிக சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கடந்த 12 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட்களில் 7 முதல் 8 தடவை 400 ரன்னுக்கு மேல் குவித்து இருக்கிறோம். இது சிறந்த சாதனையாகும். இந்திய ஆடுகளங்களில் எங்கள் அணி வீரர்களால் நேர்த்தியாக விளையாட முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜோ ரூட் 99 டெஸ்டில் விளையாடி 8249 ரன் எடுத்துள்ளார். சராசரி 49.39 ஆகும். 19 சதமும், 49 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 254 ரன் குவித்துள்ளார்.

அவர் தனது அறிமுக நாக்பூர் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 70 ரன்னும், 2-வது இன்னிங்சில் 20 ரன்னும் எடுத்தார். அவர் இந்திய மண்ணில் 6 டெஸ்டில் விளையாடி 584 ரன் எடுத்துள்ளார். சராசரி 53.09 ஆக இருக்கிறது.

இங்கிலாந்து அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் நடந்த 2 டெஸ்டிலும் வெற்றி பெற்று சாதித்தது. இதில் ஜோரூட் ஆட்டம் முத்திரை பதிக்கும் வகையில் இருந்தது. அவர் முதல் டெஸ்டில் இரட்டை சதமும் (228 ரன்), 2-வது டெஸ்டில் சதமும் (186 ரன்) அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து