சென்னையில் பத்மாவதி தாயார் கோவில் கட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள நிலம்: நடிகை காஞ்சனா நன்கொடை

வியாழக்கிழமை, 4 பெப்ரவரி 2021      ஆன்மிகம்
actress Kanzana 2021 02 04

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்ட சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி ரோட்டில் நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.30 கோடி மதிப்புள்ள நிலத்தை இவர் நன்கொடையாக வழங்கி உள்ளார்.

சென்னை தி.நகரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளது. இதேபோல திருப்பதி தேவஸ்தானம் பத்மாவதி தாயார் கோவிலையும் கட்டுவதற்கு முடிவு செய்தது. இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது. இப்போது ஜி.என்.செட்டி ரோட்டில் கோவிலுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமானதாகும்.

மொத்தம் 14 ஆயிரத்து 880 சதுர அடியில் கோவில் கட்டப்படுகிறது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடி ஆகும். கோவில் ரூ.6 கோடியே 85 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளது. கட்டுமானங்கள் எப்படி அமைய வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. ராஜகோபுரம், பிரகாரம், முகாம் மண்டபம் என கோவிலை கட்ட இருக்கிறார்கள்.

கோவிலுக்கு ரூ.5 கோடியே 75 லட்சம் செலவாகும் என முதலில் மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் அலங்கார செங்கல் கொண்டு கட்டுவதாக முடிவு செய்து இருந்தனர்.

அதன் பிறகு ஐதராபாத், குருஷேத்ரா ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள கோவில் போல கிரானைட் மூலம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக அதன் மதிப்பீடு தொகை ரூ.6 கோடியே 85 லட்சமாக உயர்ந்துள்ளது. அவற்றுக்கான பணத்தை நன்கொடையாக பெற உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து