முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி: இன்று சென்னையில் தொடக்கம்: பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை

வியாழக்கிழமை, 4 பெப்ரவரி 2021      விளையாட்டு
Image Unavailable

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்குகிறது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து 4 டெஸ்ட் போட்டி, 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் மற்றும் இராண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனோ பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டப் பந்தயம், கால்பந்து பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள் தொடர்ந்து வலைபயிற்சியிலும் ஈடுபட்டனர்.

முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரசிகர்களுக்கு அனுமதி இல்லையென்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும் முதல் முதல் டெஸ்டுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இலங்கையில் 2 டெஸ்டிலும் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு சவால் கொடுக்கும். அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்ற இந்திய அணி அதே உத்வேகத்துடன் இங்கிலாந்து எதிரான போட்டியில் களம் இறங்குகிறது.

இந்நிலையில் பிப்ரவரி 13–ந் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததை அடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 50 சதவீத ரசிகர்களுக்கு பி.சி.சி.ஐ. அனுமதி அளித்துள்ளதால் 2-வது டெஸ்டுக்கான டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்கும் எனத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் சிதம்பரம் மைதானம் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. 1934-ம் ஆண்டு முதல் சென்னையில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதுவரை 32 டெஸ்ட் நடந்துள்ளது. இதில் இந்திய அணி 14-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும், ஒன்றில் டையும், 11-ல் டிராவும் கண்டுள்ளது. டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் வெற்றியை பெற்றுத்தந்த இடம் சென்னை தான். 1952-ம் ஆண்டு நடந்த அந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது.

சென்னையில் முதல்முறையாக இந்திய அணியை எதிர்த்து (1934-ம் ஆண்டு) களம் இறங்கிய முதல் அணி இங்கிலாந்து. கடைசியாக 2016-ம் ஆண்டு மோதியதும் இங்கிலாந்து அணிதான். அந்த டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டெஸ்டில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இங்கிலாந்து அணி இங்கு 9 டெஸ்டில் ஆடி 3-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து