சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் புதிதாக கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று முதலில் அறிவித்தார். ஆனால் அவரது அண்ணாத்த படப்பிடிப்பின்போது 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.
இந்த நிலையில் அரசியலில் ஈடுபட்டு கட்சி தொடங்க போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திடீரென அறிவிப்பு வெளியிட்டார்.
இதனிடையே ரஜினி ரசிகர்கள் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளில் இணைந்தனர். இதனையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தினர், ராஜினாமா செய்துவிட்டு எந்த கட்சியிலும் சேரலாம் என ரஜினி மன்ற நிர்வாக சுதாகர் அறிவித்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் நூறு சதவிகிதம் கட்சி தொடங்கி போட்டியிடவில்லை என்று ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவர் சுதாகர், நிர்வாகிகளுக்கு தொலைபேசி மூலமாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அர்ஜூன மூர்த்தி தொடங்கும் கட்சிக்கும், ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுதாகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக பரவும் தகவல் பொய்யானது என்றும் சுதாகர் தெரிவித்திருக்கிறார்.