முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன அழிப்பு நடவடிக்கையை கண்டித்து இலங்கையில் தமிழர்கள் போராட்டம்: ஆணிகளை வீசி தடுக்க முயன்ற சிங்களர்கள்

திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கொழும்பு : இலங்கையின் வடக்கு - கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களின் உரிமையை பாதிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இலங்கை தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு, வடக்கு, கிழக்கு மாகாணங்களை புத்த மயமாக்குதல் ஆகியவற்றை கைவிட வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். காணாமல் போன தமிழர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

முஸ்லிம் மக்களின் உடல் அடக்கம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு. மலையக மக்களின் சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை இலங்கை தமிழர்கள் முன்வைத்து வருகிறார்கள்.

ஆனால் இவற்றை இலங்கை அரசு கண்டு கொள்ளவில்லை. எனவே இலங்கை தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து இலங்கை அரசுக்கு எதிராக அகிம்சை வழியில் போராடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள், சமய தலைவர்கள், காணாமல் போனோரின் பெற்றோர்கள், முஸ்லிம் அமைப்புகள் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தனர்.

இதையடுத்து இலங்கையின் கிழக்கு மாகாண பொத்துவில் என்ற இடத்தில் இருந்து பொலிகண்டி வரை இந்த அகிம்சை எழுச்சி போராட்டம் நடத்தப்பட்டது. தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினார்கள்.

இறுதி நாளான நேற்று கிளிநொச்சியில் போராட்டம் தொடங்கியது. யாழ்ப்பாணத்தை நோக்கி சென்ற இந்த பேரணியில் ஏராளமானோர் இணைந்தனர். போராட்டத்தை ஒடுக்க நீதிமன்ற உத்தரவு, போலீஸ் ஆகியவற்றை அரசு பயன்படுத்தி தடுக்க முயன்றது. என்றாலும் பேரணியும், போராட்டமும் வெற்றிகரமாக நடந்தது.

போராட்டம் நடைபெற்ற பகுதியில் தமிழர்கள் வாகனங்களை தடுக்க சிங்களர்கள் ஆணிகளை வீசினார்கள். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டோரை அடையாளம் காணும் வகையில் வீடியோ எடுத்தனர். என்றாலும் அமைதியான முறையில் தமிழர்கள் போராட்டத்தை நடத்தி நிறைவு செய்தனர்.

இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறும்போது, ‘யுத்தம் நடந்த காலத்துக்கு பிறகு தமிழர்களின் போராட்டம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடந்த இந்த எழுச்சி மிகு அகிம்சை போராட்டம், தமிழர் உரிமைகளை திரும்ப பெறுவதற்கான முதல் வெற்றி. இதுபோன்ற போராட்டங்கள் இனி வேறு வடிவில் நடைபெறும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து