சிட்னி : ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசால் இதுவரை 28,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 909 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன.
அதேசமயம் தடுப்பூசி திட்டத்தை தொடங்குவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்க உள்ளது.
அதற்கு முன்னோட்டமாகவும், கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பாக மக்களிடையே நிலவும் அச்ச உணர்வை நீக்கி, நம்பிக்கையூட்டும் வகையிலும், தடுப்பூசி திட்டம் தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.
ஆஸ்திரேலியா முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் அதிகாரபூர்வமாக தொடங்கும் நிலையில், அதுகுறித்து மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்வு நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.