ரெட்டேரி மேம்பாலம் பயன்பாட்டிற்கு தயார்: முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார்

திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2021      தமிழகம்
Edappadi 2021 02-17

Source: provided

சென்னை : சென்னை கொளத்தூரை ஒட்டிய ரெட்டேரி சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் அங்கு மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றது.

ரெட்டேரி சந்திப்பை கடந்துதான் பல்வேறு புதிய பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.

இதனால் இந்த சந்திப்பில் எப்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து 2 மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஒரு மேம்பாலம் கோயம்பேடு நோக்கி செல்லவும், மற்றொரு மேம்பாலம் மாதவரம், செங்குன்றத்தை நோக்கி செல்லும் வகையிலும் கட்டப்பட்டது. கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேம்பால பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

கோயம்பேடு மார்க்கத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி வாகனங்கள் செல்ல வசதியாக மேம்பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது வாகனங்கள் செல்வதால் அந்த பகுதியில் அதிக நெரிசல் ஏற்படுவது இல்லை. மறுபுறம் புதிய மேம்பாலம் கட்டும்பணி 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ரூ.32 கோடி மதிப்பீட்டில் 800 மீட்டர் தூரத்துக்கு இந்த மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.

சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இந்த மேம்பால பணியை முடித்து திறக்க வேண்டும் என்பதால் கடந்த ஒரு மாதமாக இரவு, பகலாக நடந்து வந்த பணிகள் தற்போது முழுமை அடைந்துள்ளன. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தயாராகவும் திறந்து வைக்க அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு இருப்பதாக நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக இதனை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரெட்டேரி மேம்பாலம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் அந்த பகுதியில் போக்கு வரத்து சீராகும்.

ரெட்டேரி ஜங்சனில் வாகனங்கள் நிற்காமல் செல்லக்கூடிய நிலை ஏற்படும். இருபுறமும் செல்லக்கூடிய வாகனங்கள் அந்த பகுதியை விரைவாக கடந்து செல்ல முடியும். மேலும் பாலத்தின் கீழ் பகுதி வழியாக செல்லக்கூடிய வாகனங்களும் நெரிசல் இல்லாமல் இனி செல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து