முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா, சீனா படைகள் வாபஸ் : அமெரிக்கா வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி இருதரப்பு ராணுவத்துக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் சுமார் 35 பேரும் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் இருதரப்பும் படைகளை குவித்தன. எனவே இருநாட்டு எல்லையில் போர் பதற்றம் அதிகரித்தது.

இதற்கு மத்தியில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இருதரப்பும் பேச்சுவார்த்தைகளையும் தொடர்ந்தன. அந்தவகையில் இருநாட்டு லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டது. எல்லையில் பதற்றத்துக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படிப்படியாக படைகளை விலக்குவது எனவும், எல்லையில் அமைதியை மீண்டும் ஏற்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

எனினும், கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா தொடர்ந்து அத்துமீறி வந்ததால், இந்திய படைகள் பதிலடி கொடுக்க நேரிட்டது. இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் தொடர்ந்து குவித்ததால் அங்கு போர்ப்பதற்றம் நிலவி வந்தது. அங்கு அமைதியையும், சமாதானத்தையும் மீண்டும் ஏற்படுத்துவதற்காக இரு தரப்பிலும் ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இதற்கிடையே இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் இடையே தளபதிகள் மட்டத்திலான 10-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த 2 நாட்களுக்கு முன் மோல்டோ என்ற இடத்தில் அமைந்த சீன தரப்பு அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடைபெற்றது.

பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதிகளில் இருந்து படைகளை இரு தரப்பினரும் வாபஸ் பெற்ற பின்னர், மோதல் ஏற்படும் வகையிலான பிற பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது பற்றி இரு நாட்டினரும் ஆலோசனையில் ஈடுபடுவார்கள் என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் லே லடாக் எல்லையின் ஒரு பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெறும் பணியில் இந்தியா மற்றும் சீனா நாடுகள் ஈடுபட்டு அதனை நிறைவு செய்தன.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பு அதிகாரி நெட் பிரைஸ் கூறியதாவது:

எல்லை பகுதியில் பதற்ற சூழ்நிலையை தவிர்க்கும் வகையில் இந்தியா மற்றும் சீனா நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். படைகள் வாபஸ் பற்றிய அறிவிப்புகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

அமைதியான தீர்வு காணப்படுவதற்கான பணியில் இரு தரப்பினரும் ஈடுபட்டு வருவதனை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவோம்.

கொரோனா பெருந்தொற்று தொடக்க காலத்தில் இருந்தே இந்திய மருந்து தொழிற்சாலையுடன் இணைந்து அமெரிக்க மருந்து தொழிற்சாலை பணியாற்றி வருகிறது என்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து