முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம்

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை  தாக்கல் செய்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- 

குழந்தைகளுக்கு உயர்தர கல்வியை வழங்குவது இந்த அரசின் உயர்ந்த முன்னுரிமை ஆகும். எனவே பள்ளி கல்விக்காக அதிகபட்சமான ஒதுக்கீடாக, 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் இடைவிடாமல் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்வதற்காக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக பாடபுத்தகங்களை அரசு வழங்கியது. 12-ம் வகுப்புக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் 1,912 வீடியோ பாடங்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதனால் 4,20,624 மாணவர்கள் பயன் அடைந்தனர். 

5,522 வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அரசின் சார்பாக 10 இதர தனியார் தொலைக்காட்சிகளும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன. மாணவர்களுக்கான பாடங்கள் பல்வேறு இணையதளங்களில் மின்னணு தொகுப்பில் பதிவேற்றப்பட்டுள்ளன. 

இதுவரையில் கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவானது 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் தனிப்பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும்.  இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து