வேறு எவரையும் தமிழக மக்கள் நம்பமாட்டார்கள்: நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: துணை முதல்வர் ஓ.பி.எஸ். உறுதி

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      தமிழகம்
OPS-2021-02-22

Source: provided

சென்னை : தமிழக மக்கள் வேறு எவரையும் நம்ப மாட்டார்கள். நாங்களே மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று சட்டசபையில் நேற்று துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட கூறினார்.

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசுகையில் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:–

2020-21ம் ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்று தாக்கத்தின் காரணமாக மாநிலத்தின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதை நாம் நன்கறிவோம். திறமையான நிதி நிர்வாகத்தின் மூலம் நிதிநிலை பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்தியுள்ளோம். இயல்பான வளர்ச்சி நிலை திரும்பி வருகின்ற பயனாக, 2021-22 ம் ஆண்டில் முன்னேற்றம் தானாகவே ஏற்படும் என நான் எதிர்பார்க்கிறேன். 

கூடுதல் வருவாயை அதிகரிக்கும் வழிகளைக் கண்டறிதல், பெரிய பொதுத்துறை நிறுவனங்களின் இழப்புகளை கட்டுப்படுத்துதல், வளர்ச்சியை அதிகரிக்கும் செலவினங்களுக்கு போதுமான ஆதாரங்களை கண்டறிதல் என மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வரி வருவாயின் விகிதத்தை உயர்த்துவதற்காக நமது அரசால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். 

நல்லாட்சியை வழங்குவதற்கும், நிதி ஒருங்கிணைப்புப் பணியை மீண்டும் தொடங்குவதற்கும் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அம்மாவின் அரசைத் தவிர வேறு எவரையும் தமிழ்நாடு மக்கள் நம்ப மாட்டார்கள். இந்தப் பணியை நிறைவேற்ற நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து