ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட யூசப் பதானின் சாதனைகள்

சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2021      விளையாட்டு
Yusuf-Pathan 2021 02 27

Source: provided

மும்பை : கிரிக்கெட் ஆடுகளத்தில் மறக்க முடியாத பல அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்திய யூசுப் பதான், ஓய்வு அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்டார்.

38 வயது யூசுப் பதான், 57 ஒருநாள், 22 டி20 ஆட்டங்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான யூசுப் பதான், 2012-ல் கடைசியாக விளையாடினார்.

100 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 2 சதங்கள் மற்றும் 3 அரை சதங்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 33 விக்கெட்டுகளும் டி20யில் 13 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 

ஐ.பி.எல் போட்டியில் முக்கியமான வீரராக இருந்த யூசுப் பதான், 2010-ல் மும்பைக்கு எதிராக 37 பந்துகளில் சதமடித்தார். 

அதிரடியாக விளையாடி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் யூசுப் பதான். அதன் தொகுப்பு:

1. 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் யூசுப் பதானும் இடம்பெற்றிருந்தார்.

2. 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் யூசுப் பதானும் இடம்பெற்றிருந்தார்.

3. மூன்று முறை ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளார். (ஒருமுறை ராஜஸ்தானுக்காகவும் இருமுறை கொல்கத்தாவுக்காகவும்) 

4. 2008 ஐ.பி.எல் போட்டியின் இறுதிச்சுற்றில் 39 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

5. ஐ.பி.எல் போட்டியின் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் (37 பந்துகள்)

6. ஐ.பி.எல் போட்டியில் குறைந்த பந்துகளில் அரை சதமெடுத்த வீரர்களில் 2-ம் இடம் (15 பந்துகள்).

7. தென் ஆப்பிரிக்காவில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் (68 பந்துகள்)

8. முதல்தர கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர்களில் 2-ம் இடம் (51 பந்துகள்)

9. ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சிக்ஸர்களும் டி20 கிரிக்கெட்டில் 17 சிக்ஸர்களும் அடித்துள்ளார். ஐ.பி.எல் போட்டியில் 158 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 

10. ஐ.பி.எல் போட்டியில் 16 முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இந்திய வீரர்களில் 3-ம் இடம்.

11. 2009-10 துலீப் கோப்பை இறுதிச்சுற்றில் 536 ரன்களை விரட்டியபோது ஆட்டமிழக்காமல் 210 ரன்கள் எடுத்து அசத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து