சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார்கள்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதான கட்சியான அ.தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில், அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையை தற்போது அ.தி.மு.க. தொடங்கியுள்ளது.
பா.ம.க.வுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அந்த கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். கூட்டணி கட்சிகளுடன் நடந்த பேச்சு குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.