முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூ. அதிருப்தி தி.மு.க. கூட்டணியில் இழுபறி நீடிப்பு

வெள்ளிக்கிழமை, 5 மார்ச் 2021      அரசியல்
Image Unavailable

தி.மு.க. கூட்டணியில் 3-வது நாளாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.

தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸின் நிலை

காங்கிரஸ் கடந்த 2016 பொதுத்தேர்தலின் போது 41 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் 8 இடங்களில் தான் வெற்றி பெற்றது. இதனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

அதன் அடிப்படையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான குழுவினர் அண்ணா அறிவாலயத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த சென்ற போது 18 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. இது காங்கிரசாருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. 50 தொகுதிகளுக்கான பட்டியலை நாங்கள் வைத்துள்ளோம். நீங்கள் 18 தொகுதிகளில் இருந்து பேச்சுவார்த்தையை தொடங்குகிறீர்களே என்று காங்கிரசார் வருத்தப்பட்டனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் இடையே நடைபெற்ற 2-ம் கட்டப் பேச்சில் 22 முதல் 24 தொகுதிகள் வரை காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக கூறப்பட்டது. ஆரம்பத்தில் எடுத்த முடிவில் இருந்து தி.மு.க. பின்வாங்கவில்லை. ஆனால் 35 தொகுதிகள் வரை காங்கிரஸ் கேட்டது.

இதனால் தி.மு.க. அளிக்கும் தொகுதிகளை பெற்றுக்கொண்டு தேர்தலை சந்திக்கலாமா? அல்லது வேறு முடிவுகளை எடுக்கலாமா? என்பது குறித்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்தார்.

நிர்வாகிகளில் பலர் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதி கிடைக்காத பட்சத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற தயங்கக்கூடாது. தனித்து போட்டியிட்டு நமது பலத்தை காண்பிக்கலாம். காங்கிரஸ் தொண்டர்கள் எதற்கும் தயாராக உள்ளனர் என்று கூறியுள்ளனர்.

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதால், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் தினேஷ் குண்டுராவ், வீரப்ப மொய்லி, கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் ஒரு மணிநேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது.

தற்போது தி.மு.க. 25 தொகுதிகள் வழங்க முன் வந்துள்ளதாகவும், 27 தொகுதிகள் ஒதுக்குமாறு காங்கிரஸ் இறங்கி வந்துள்ளதாகவும் தெரிகிறது. தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும். என வீரப்பமொய்லி தெரிவித்தார்.

ம.தி.மு.க.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது ம.தி.மு.க. 10 தொகுதிகள் வரை கோரியிருந்த நிலையில், 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. தி.மு.க. – ம.தி.மு.க. 2 முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. பின்னர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 3-ம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு தி.மு.க. இன்னும் அழைக்கவில்லை. விடுதலை சிறுத்தை கட்சியை தி.மு.க. கவுரவமாக நடத்தி உள்ளது. ஆனாலும் கமலஹாசன் தலைமையிலான 3-வது அணிக்கு ம.தி.மு.க. செல்லாது என்றும் அவர் கூறினார்.

கம்யூனிஸ்ட்

தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. மாநிலச் செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் தொடர்ந்து தி.மு.க.வுடனான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. ஆனால் கம்யூனிஸ்ட் தொடர்ந்து இரட்டை இலக்கு எண்ணில் தொகுதிகளை கோரி வருகிறது.

ஏற்கெனவே 2 முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதனையடுத்து நேற்று 3-வது முறையாக தி.மு.க.வுடன் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

குறைந்த தொகுதிகளை ஒதுக்குவது ஏன்?

ஒவ்வொரு கூட்டணி கட்சிகளுக்கும் தி.மு.க. குறைந்த தொகுதிகளை ஒதுக்குவது ஏன்? என்பது குறித்து நிர்வாகி ஒருவர் கூறியதாவது:– 

கடந்த 2006 தேர்தலின் போது தி.மு.க.வுக்கு முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆதரவுடன் தான் ஆட்சி அமைத்தது. இதற்கு காரணம் தி.மு.க. 160 தொகுதிகளுக்கு கீழே நின்றதால் தான் மெஜாரிட்டியை பெற முடியாமல் போனது. தி.மு.க. ஆட்சியைப் பார்த்து மைனாரிட்டி அரசு என்று அப்போது எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூறிவந்தது. பெரும்பான்மையை பெற தவறியதற்கு குறைந்த இடங்களில் போட்டியிட்டதே காரணம் என்பது தெரியவந்தது.

மேலும் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கினால் அந்த தொகுதிகளில் எளிதாக எதிர்கட்சிகள் வெற்றி பெற்று விடுகின்றன. அவரவர் சின்னத்தில் நிற்பதால் வெற்றி வாய்ப்பும் குறைவதாக கருதியதால் தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்பட்டு வருகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து