முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் சீட் மறுப்பு: மம்தாவின் தோழி பா.ஜ.க.வில் இணைகிறார்

திங்கட்கிழமை, 8 மார்ச் 2021      அரசியல்
Image Unavailable

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய தோழியும், 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான சோனாலி குஹா பா.ஜ.க.வில் இணையப் போவதாகத் தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் 291 வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டார். இந்தப் பட்டியலில் 20 அமைச்சர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.  

குறிப்பாக நிதி அமைச்சர் அமித் மித்ரா, நிலவளத்துறை அமைச்சர் அப்துல் ராஜாக் முல்லா, வேளாண் அமைச்சர் புமேந்து பாசு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 50 பெண் வேட்பாளர்களுக்கும், 42 முஸ்லிம்களுக்கும் மம்தா இந்த முறை வாய்ப்பு வழங்கியுள்ளார்.  இதில் முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய தோழியாகவும், நெருக்கமானவராகவும் இருப்பவர் சோனாலி குஹா. சத்காச்சியா தொகுதியிலிருந்து 4-வது முறையாக எம்.எல்.ஏ.வாக சோனாலி குஹா உள்ளார்.  இந்த முறை சோனாலிக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள சோனாலி குஹா பா.ஜ.க.வில் இணையத் திட்டமிட்டுள்ளார். 

இதுகுறித்து சோனாலி குஹா நிருபர்களிடம் கூறுகையில், தீதி (மம்தா) என்னைக் கைவிட்டு விட்ட பின், நான் அவரை விட்டுச் செல்வதில் என்ன தவறு இருக்கிறது? நான் பா.ஜ.க.வில் இணைய விருப்பமாக இருப்பது குறித்து பா.ஜ.க. துணைத் தலைவர் முகுல் ராயுடன் பேசினேன். எனக்கு எம்.எல்.ஏ. சீட் வேண்டாம், கட்சியில் நல்ல பதவி வேண்டும் என்று கேட்டேன். அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார். மேலிடத்திலும் பேசி விட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆதலால், பா.ஜ.க.வில் இணைய இருக்கிறேன். நான் என்னுடைய கடினமான உழைப்பு, முயற்சிகள் அனைத்தையும் தீதிக்குக் கொடுத்தேன். அவர் மீது எவ்வளவு மரியாதையாகவும், கட்சிக்கு உண்மையாகவும் இருந்தேன் என்பது மற்றவர்களுக்குத் தெரியும். இனிமேல் என்னுடைய உழைப்பைப் புதிய கட்சிக்கு வழங்குகிறேன். எனக்கு சீட் வழங்கப்படவில்லை என்பதை எனக்கு முன்கூட்டியே கூறாமல் இருந்தது எனக்கு வேதனையாக இருந்தது எனத் தெரிவித்தார். சோனாலி குஹா இன்று பா.ஜ.க.வில் முறைப்படி இணைவார் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து