முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள் : பெரியபுள்ளானை ஆதரித்து மேலூரில் முதல்வர் பிரச்சாரம்

வியாழக்கிழமை, 25 மார்ச் 2021      அரசியல்
Image Unavailable

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பு அ.தி.மு.க. வேட்பாளர் பெரியபுள்ளானை ஆதரித்து தமிழக முதல்வரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

முன்னதாக அவருக்கு கலைநிகழ்ச்சிகள், விளம்பர பதாகைகள் , தோரணங்கள் வைத்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. ஏராளமான அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் கூடியிருந்தனர். அப்போது மேலூர் வேட்பாளரை ஆதரித்து வேனில் இருந்தபடியே பேசிய எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், 

கிராமம் சூழ்ந்த பகுதியான மேலூர் ஏற்றம் அடைய வேண்டும் என பலமுறை தற்போதைய வேட்பாளர் பெரியபுள்ளான் கோரிக்கை மனுவை என்னிடம் அளித்தவர். கிராம பகுதியாக உள்ள இப்பகுதிக்கு தண்ணீர் மிக முக்கியமான ஒன்று, விவசாயம் செய்ய நீர் மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்து, இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் நீர்மேலாண்மையில் விருது வாங்கியுள்ளோம். நீர்நிலைகளை தூர்வாரி, வேளாண் பணி இந்தாண்டு சிறப்படைந்துள்ளது. 

50 ஆண்டுகளில் மேட்டூர், முல்லை பெரியாறு அணை இரண்டும் நிரம்பியது இந்தாண்டு தான். ஆனால் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பொய் பேசுகின்றார். விழுப்புரம் கூட்டத்தில் என்னை பற்றியே பேசி விட்டு செல்கின்றார். விவசாயிக்கும், நாட்டு மக்களுக்கும் என்ன தேவை என்பதனை நாங்கள் தான் செய்து வருகின்றோம். 

விவசாயியும் ரவுடியும் ஒன்னா..! விவசாயியை கொச்சைபடுத்தி ஸ்டாலின் பேசுகின்றார். நான் விவசாயி என்று கூறும் போது ஸ்டாலின் பொங்கி எழுகின்றார். நாட்டின் முதுகெழும்பு விவசாயி, ஸ்டாலின் விவசாயிகளை கொச்சைபடுத்தி பேசினார் அப்படி பேசினால் எதிர்கட்சி கூட அவருக்கு கிடைக்காது. விவசாயிகள் என்றால் தீண்டத்தாகவர் போல ஸ்டாலின் நினைக்கின்றார். 

முன்னாள் அமைச்சர் தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா. அவர் செய்த அட்டூழியம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஸ்டாலின் அணிந்திருக்க செருப்பை விட ஒரு ரூபாய் குறைந்தவன் நான் என என்னை விமர்சனம் செய்கின்றார். அவர் ஒரு லட்சத்து 74 ஆயிரம் கோடி ஊழல் செய்தவர் அவர். ஆனால் நான் விவசாயியாக இருக்கின்றேன். கண்ணுக்கு தெரியாத காற்றையே ஊழல் செய்தவர்கள் தான் அவர்கள். அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுங்கள். விவசாயிகளிடம் எங்களுடைய மதிப்பு உயர்ந்து கொண்டு வருகின்றது. இதனை நாங்கள் பெருமையாக கருதுகின்றோம். வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்கும். ஒருவரை சிறுமைப்படுத்தி பேசுவதால் அவர்களுக்கு சறுக்கல் ஏற்படாது. நன்மதிப்பு தான் ஏற்படும். தரங்கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தும் கட்சி தி.மு.க. நாட்டு மக்களுக்காக தி.மு.க. இல்லை. தி.மு.க. என்பது வெறும் கம்பெனி. வாரிசு அரசியலை செய்கின்றனர். கொள்ளையடிப்பதில் தி.மு.க.வினர் மன்னர்கள். தி.மு.க. அராஜக, ரவுடி கட்சி அவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் சொத்து உங்களிடம் இருக்காது.. நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள்.. 

அதிகாரிகளையும், டி.ஜி.பி.யையும் உதயநிதி ஸ்டாலின் மிரட்டுகின்றார். காவல்துறையின் உச்சபட்ச அதிகாரியை மிரட்டுகின்றனர் என்றால் நாட்டு மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும். கட்டபஞ்சாயத்து, ரவுடிசம் தி.மு.க. வந்தால் தலைதூக்கி விடும். சாதிசண்டை, மதசண்டை இல்லாமல் நிம்மதியாக வாழ்கின்றோம். தி.மு.க. வந்தால் நாடு தங்காது.. 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் மக்களுக்காக உழைத்து மறைந்தனர். அவர்களுக்கு நாம்தான் வாரிசு. அந்த வழியிலே அதிமுக அரசு செயல்பட்டு வருகின்றது. 41 சதவீதம் அரசாங்க பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவ கனவை, நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் 7.5 சதவீத உள்ஒதுக்கீட வழங்கி 435 மாணவர்கள் மருத்துவ படிப்பை இந்தாண்டு மேற்கொள்கின்றனர்..மருத்துவ கல்வி கட்டணத்தை அரசாங்கமே ஏற்கும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விவசாயி தான், விவசாயியின் எண்ணங்களை பார்க்க முடியும். 

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கல் இடம்பெற்றுள்ளன. அதில் 100 நாள் பணியை 150 நாட்களாக உயர்த்தப்படும் கூட்டுறவு கடன் ரத்து, மகளிர் சுய உதவி குழு கடன் ரத்து செய்யப்படும். நகைகடன் தள்ளுபடி செய்யப்படும். அதிமுக தேர்தல் அறிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் கட்சியாக உள்ளது. ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். பெண்கள் சுமையை குறைக்கும் விதமாக அரிசி அட்டைதாரர்களுக்கு வாஷிங்மிஷின் வழங்கப்படும், பெண்களுக்கு 1500 ரூபாய் வழங்கப்படும், ரேசன் பொருள் வீடு தேடி வரும்,18 வயது நிரம்பியவர்களுக்கு அரசாங்கமே ஓட்டுநர் பயிற்சி வழங்கப்படும். தை பிறந்தால் வழி பிறக்கும். தை பொங்கல் கொண்டாட கடந்தாண்டு 1000 தந்தோம். இந்தாண்டு பொங்கல் தொகுப்பு 2500 ருபாய் தந்தது அதிமுக. வீடு மற்றும் நிலம் இல்லாத ஏழைகளுக்கு சொந்தமாக கான்கீரிட் வீடு கட்டி தரப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார். 

பிரச்சாரத்தின் போது முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட கழக பொருளாளர் அம்பலம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பெரியசாமி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மதுரை வக்பு வாரிய தாளாளர் ஜபார், மேலூர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் பொன்னுச்சாமி, பொன்ராஜேந்திரன், வெற்றிச்செழியன், குலோத்துங்கன், மேலூர் நகர் கழகசெயலாளர் பாஸ்கரன், பேரூர் கழக செயலாளர் மணிகண்டன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் முருகேசன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் அன்புச்செல்வன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல மண்டல துணைத் தலைவர் கௌரிசங்கர், மேலூர்நகர்அம்மா பேரவை சாகுல்ஹமீது, மாவட்ட நிர்வாகிகள் மீரா உசேன், இளையராஜா, உமாபதி, எம்.கே.பி.அருண், மணிவாசகம், மொண்டி, சன்மார்க்கம், தலைமை கழக பேச்சாளர் மலைச்சாமி, சரவணகுமார், உதயசங்கர், உதயகுமார், சிவா, கரும்புச்செல்வம், உட்பட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து