திருமலையில் ஆழ்வார் திருமஞ்சனம் 6 மணிநேரம் தரிசனம் ரத்து

திங்கட்கிழமை, 5 ஏப்ரல் 2021      ஆன்மிகம்
Tirupati-2021-04-05

திருமலையில் நடக்க உள்ள யுகாதி பண்டிகையை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. அன்று 6 மணி நேர தரிசனம், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. 

இதுகுறித்து திருமலை - திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும் நாளன்று முன்கூட்டியே வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கும்.

அதன்படி வருகிற 13-ந்தேதி யுகாதி பண்டிகை மற்றும் ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஏழுமலையான் கோவிலில், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.6-ந்தேதி காலை 6 மணியில் இருந்து பகல் 11 மணி வரை ஆனந்த நிலையம் முதல் பங்காருவாகிலி வரையிலும், கோவிலில் அனைத்துப் பூஜைகளுக்கும் பயன்படுத்தும் தாமிர, பித்தளை பொருட்களும், துணை சன்னதிகள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரைகள், தூண்கள், மாடங்கள் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்படும்.தூய்மைப்பணி முடிந்ததும் மஞ்சள், சந்தனம், குங்குமம், நாமக்கொம்பு, ஸ்ரீகந்தம் சூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சையிலை, பச்சை கற்பூரம், கிச்சிலிகட்டை சூரணம் ஆகிய சுகந்த திரவிய பொருட்கள் தூண்கள், மாடங்கள், சுவர்கள், மூலவர் அறை உள்பட பல்வேறு இடங்களில் பூசப்படும். அதன் பிறகு மூலவருக்கு சிறப்புப் பூஜைகள், நெய்வேத்தியம் செய்யப்படும். இதையடுத்து மதியம் 12 மணிக்குமேல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் 6 மணிநேர தரிசனம், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து