18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் பரிந்துரை

செவ்வாய்க்கிழமை, 6 ஏப்ரல் 2021      இந்தியா
modi 2020 11 03

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை ஏற்பட்டு வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய் பரவல் 1 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

இந்தநிலையில் நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.

கொரோனா நோய் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் அதை கட்டுப்படுத்த 2 வழிகள்தான் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் கொரோனா நோய் மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

தற்போதுவரை 7 கோடியே 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 6 கோடியே 81 லட்சம் பேருக்கு முதல்கட்ட தடுப்பூசியும், 1 கோடியே 5 லட்சம் பேருக்கு 2-வது தடுப்பூசியும் போடப்பட்டுள்ளன. 2-வது அலை நோய் பரவல் மிக வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் தடுப்பூசி போடுவதை போர்க்கால அடிப்படையில் இன்னும் வேகப்படுத்த வேண்டும்.

தற்போது 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்க வேண்டும். தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கையில் இருந்தால் தான் அவர்களை பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும். ரே‌ஷன் பொருட்கள் வாங்குவதற்கும் இந்த சான்றிதழை கட்டாயமாக்க வேண்டும்.

தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவதற்கு இன்னும் பல ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகள், குடும்ப ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றில் ஊசி போடுவதை தாராளமாக அனுமதிக்க வேண்டும். இவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். முகாம்கள் அமைத்தும் ஊசி போடலாம்.

மாவட்ட அளவில் தனியாக தடுப்பூசி குழு அமைக்க வேண்டும். இதில் பொது மக்கள் மற்றும் தனியார் அமைப்புகளும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். குறுகிய நேரத்திற்கு கண்டிப்பாக பொது முடக்கத்தை செயல்படுத்த வேண்டும். சினிமா தியேட்டர்கள், கலாசார கூடங்கள், மத நிகழ்ச்சிகள் போன்றவற்றை தடுக்கலாம்.

அத்தியாவசியமற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து