புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என சூழ்நிலை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கடந்த 1-ந் தேதியில் இருந்து 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. விருப்பம் இருந்தால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையை பார்க்கும்போது வயதுவந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறுகையில், தேவைகள் - விருப்பங்கள் என்ற விவாதம் அபத்தமானது. ஒவ்வொரு இந்தியரும் தனது வாழ்க்கையை பாதுகாப்பதற்கான வாய்ப்புக்கு தகுதியானவர்கள் என டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.