அதிகரிக்கும் கொரோனாவால் 4 வாரம் நெருக்கடியானதாக இருக்கும்: மத்திய சுகாதார துறை திடுக்கிடும் தகவல்

புதன்கிழமை, 7 ஏப்ரல் 2021      இந்தியா
Corona-Damage 2021 04 07

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது வி.கே.பால் கூறுகையில், நாட்டில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உயர்ந்து நிலைமை மோசமடைந்துள்ளது.

முகக் கவசம் அணிதல், கூட்டங்களில் இருந்து விலகி இருத்தல், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பரிசோதனைகள், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல், தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துதல் ஆகியவைதான் நோய்த்தொற்றை எதிர்ப்பதற்கான வழிமுறைகள். இவை ஏற்கெனவே கூறப்பட்டவைதான். அவற்றை சரிவர பின்பற்ற வேண்டும்.

தற்போது நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு மிக முக்கியம். அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கப் போகின்றன. ஒட்டுமொத்த நாடு ஒன்றிணைந்து நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் பேசுகையில் நாட்டில் அதிக கொரோனா நோயாளிகள் 10 மாவட்டங்களில் உள்ளனர். இதில் 7 மாவட்டங்கள் மகாராஷ்டிராவில் உள்ளன.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசு தொடங்காதது ஏன் என்று பலர் கேட்கின்றனர். கொரோனா பலி எண்ணிக்கையை குறைப்பதுதான் தடுப்பூசி திட்டத்தின் அடிப்படை நோக்கம். மருத்துவத் துறையில் பணிபுரிவோரை பாதுகாப்பது அந்தத் திட்டத்தின் மற்றொரு நோக்கமாகும். முன்னுரிமை அடிப்படையில் தற்போது அவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் யாருக்கு வேண்டும் என்பதன் அடிப்படையில் இல்லாமல், யாருக்கு தேவைப்படுகிறது என்பதன் அடிப்படையில் செலுத்தப்படுகின்றன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து