தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்

வியாழக்கிழமை, 8 ஏப்ரல் 2021      தமிழகம்
TN-assembly-2021-04-08

* பஸ்களில் நின்று பயணிக்க தடை - அமர்ந்து செல்ல அனுமதி      * கோவில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் தளர்வின்றி ஊரடங்கு       * வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ - பாஸ் அவசியம்

அதிகரித்து வரும் கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் நாளை 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.  அதன்படி, பஸ்களில் நின்று பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பஸ்களில் பொதுமக்கள் அமர்ந்து செல்ல மட்டுமே  அனுமதியளிக்கப்படுவதாகவும்,  கோவில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்,  நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் தளர்வின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  45 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருகிறது.  இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆராய தமிழக அரசு எடுக்க உள்ள நிலைப்பாடு குறித்தும், கொரோனா பரவல் குறித்து தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன ? எடுப்பது என்பது குறித்து நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  இதன் முடிவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன், வரும் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஏப்ரல் 5-ம் தேதி சுகாதாரத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட முக்கயிமான துறையின் உயர் அலுவலர்களுடனும், மாவட்ட கலெக்டர்களுடனும் ஆய்வு நடத்திய உரிய தடுப்பு நடவடிக்கைளை உடனடியாக தீவிரப்படுத்த அறிவுரை வழங்கியதை அடுத்து, மாவட்ட நிர்வாகங்கள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலும் தடை விதிப்பதும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிப்பதும் அவசியமாகிறது.

பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்ய தடை

அதன்படி, சென்னை கோயம்பேடு சந்தையில், சில்லறை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் நாளை 10-ம் தேதி முதல் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மிகப்பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.  மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.  

புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதிக்கலாம். அதே வேளையில், பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

வெளி மாநிலத்தவருக்கு  இ- பாஸ் அவசியம்

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வர இ-பதிவு அவசியம்.  தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.  தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.  ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும்.  திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.  தமிழகம்  முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.  

நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து கடைகள், மிகப்பெரிய (நகை, ஜவுளி) கடைகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

கட்டுப்பாடுகள் முழு விவரம்

அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது. ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.  அனைத்து கடைகளிலும் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.  நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெறும். சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளில் பங்கேற்போர்  தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி  தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.  நீச்சல் குளங்கள், விளையாட்டு விதிகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. 

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு மண்டலத்திலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த பகுதியில் இருந்து வெளியில் வராத வகையில் காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை கொண்டு தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். 

இந்த பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதோடு நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு உதவி புரிய தன்னார்வலர்களும் நியமிக்கப்படுவர். 

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும் பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பாடுபட வேண்டும்.  பொதுமக்கள் வெளியே செல்லும் போது பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தலும் வேண்டும். 

காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்திடவும், வீட்டிற்கு வீடு சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை தினந்தோறும் கண்காணிக்கவும், நோய் தொற்று ஏற்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இதனை தீவிரமாக கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். நோய் தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி அருகே உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும். நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து