முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முதல் கூடுதலாக 400 பஸ்கள் இயக்கப்படும்: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

பொதுமக்களின் கூட்ட நெரிசலை தடுக்க சென்னையில் இன்று முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்த அறிவிப்புகளையும், அறிவுறுத்தல்களையும் தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. 

அதன்படி, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி, மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக உள்ளூர், வெளியூர் பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேருந்துகளில் தங்கள் வழக்கமான பணிக்கு சென்று வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு கூடுதலாக சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் பொதுமக்கள் மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் சிரமமின்றி பயணம் செய்திட ஏதுவாக இன்று 10-ம் தேதி சனிக்கிழமை முதல் 300 முதல் 400 பேருந்துகள் வரையில் கூடுதலாக இயக்கப்படுகின்றன. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் பயணம் செய்கின்ற செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மணலி, கண்ணகி நகர், பெரம்பூர், அம்பத்தூர், ஆவடி, திருவொற்றியூர் மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து காலை மற்றும் மாலை நெரிசல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  பொதுமக்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து