முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரப்பாவின் பதவிக்காலம் நாளை நிறைவு: அண்ணா பல்கலை. துணைவேந்தரிடம் அடுத்த வாரம் விசாரணை: நீதிபதி

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் பதிவிக்காலம் நாளை முடிவடைய உள்ள நிலையில் அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். 

அண்ணா பல்கலைக் கழகத்தில் தற்போது துணைவேந்தராக இருக்கக்கூடிய சூரப்பா மீதான விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் ஏற்கனவே 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு மே மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. நாளை  சூரப்பாவின் பதவிக்காலம் நிறைவடையவிருக்கிறது.

எனவே அவர் மீதான விசாரணையை துரிதப்படுத்த ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சூரப்பா சுமார் 270 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி தனது மகளை பணி நியமனம் செய்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. 

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியிருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது. நாளை சூரப்பாவின் பதவிக்காலம் முடிவடைவதால் மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக இன்னும் ஓரிரு நாட்களில் ஆளுநர் தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பாக்கப்பட்டது. இந்நிலையில் சூரப்பா மீதான விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும்,

அடுத்த வாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றக்கூடிய உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவெடுத்திருப்பதாக நீதிபதி கலையரசன் தகவல் தெரிவித்திருக்கின்றார். சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வருமானவரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை என தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் எனவும் பதவிக்காலம் முடிவடைந்தாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து