முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்டோபருக்குள் வரும் மேலும் 5 தடுப்பூசிகள் : மத்திய அரசு தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. தற்போது, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளன. அதே நேரத்தில், தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பல மாநிலங்கள் தெரிவித்து உள்ளன. இதனையடுத்து, தடுப்பு மருந்து உற்பத்தியை விரைவுபடுத்தும்படி மத்திய அரசு கேட்டு கொண்டு உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-

இந்தியாவில், இரண்டு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் கிடைத்து விடும். ஸ்புட்னிக் வி தடுப்பூசி, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி, நோவாக்ஸ் தடுப்பூசி, ஜைடஸ் காடில்லா தடுப்பூசி, இன்ட்ராநாசல் தடுப்பூசி ஆகியவை கிடைத்து விடும். அவசர காலத்தில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன்னர், தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் திறன் ஆகியவை குறித்து மத்திய அரசு கவனத்தில் கொண்டு உள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை, அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்வதற்கு அனுமதிப்பதற்கான உத்தரவு அடுத்த 10 நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைமுறைகள் சரியாக இருக்கும்பட்சத்தில் ஸ்புட்னிக் தடுப்பூசி ஜூனிலும், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஆகஸ்டிலும், காடிலா ஜைடஸ் தடுப்பூசி ஆகஸ்ட்டிலும், நோவாக்ஸ் தடுப்பூசி செப்டம்பரிலும், நாசல் தடுப்பூசி அக்டோபரிலும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.  இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து