முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று தமிழ்ப்புத்தாண்டு: கோவில்களில் தரிசனம் செய்ய வழிகாட்டு நெறிமுறைகள்: முக கவசம் அணியாவிட்டால் பக்தர்களுக்கு அனுமதியில்லை

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழ் புத்தாண்டு தினமான இன்று கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

வடபழனி முருகன் கோவிலில் இன்று காலை 6 மணிக்கு எப்போதும் போல நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால், பக்தர்களுக்கு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்த கட்டுப்பாடுகளுடன் கொரோனா விதிமுறைகளும் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.  10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் கூறி உள்ளது.

பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலிலும் இன்று வழக்கம் போல 6 மணிக்கே நடை திறக்கப் படுகிறது. பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் காளிகாம்பாளுக்கு குங்கும லட்சார்ச்சனைக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடித்து காளிகாம்பாளை தரிசிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலிலும் வழக்கம் போல சாமிதரிசனம் நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கொரோனா பரவலுக்கு பிறகு திருவொற்றியூர் கோவிலில் குங்கும அர்ச்சனை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று குங்கும அர்ச்சனை நடை பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில்களிலும் காலை வழக்கமான தரிசனமே இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலிலும் இன்று தமிழ்ப்புத்தாண்டையொட்டி தரிசனத்துக்கு எப்போதும் போலவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு அன்று அதிகாலையில் நடை திறக்கப்படுவது வழக்கம். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அது இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.  

அனைத்து கோவில்களிலும் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து