முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில கவர்னர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில கவர்னர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். 

நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் புதிய பாதிப்புகள் தினந்தோறும் உச்சம் பெற்று வரும் நிலையில் கொரோனாவை தடுப்பதற்கான வழிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டு உள்ளன. அதேநேரம் தடுப்பூசி போடும் பணிகளையும் வேகப்படுத்தி வருகின்றன. 

இது ஒருபுறம் இருக்க தொற்றில் இருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு மத்திய அரசும், பிரதமர் மோடியும் தனிக்கவனம் செலுத்தி செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக அடிக்கடி பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

அந்தவகையில் கடந்த 5-ம் தேதி பல்வேறு துறைகளை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக மாநில முதல்வர்களுடன் கடந்த 8-ம் தேதி ஆலோசனையில் ஈடுபட்டார். 

அப்போது மாநிலங்களின் கொரோனா நிலவரம், எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைள் மற்றும் தடுப்பூசி திட்டப்பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அத்துடன் தொற்றை வீரியமாக தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். 

இவ்வாறு கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசும், பிரதமர் மோடியும் மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், இது குறித்து முதல் முறையாக மாநில கவர்னர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும், பிரதமர் மோடியும் இணைந்து இன்று (புதன்கிழமை) மாநில கவர்னர்களுடன் ஆலோசனை நடத்துவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

மெய்நிகர் முறையில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. 

குறிப்பாக தொற்றை வேரறுக்க மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படும் நிலையில், இந்த கூட்டத்தில் அது குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து