முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுக்கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து 3 மீனவர்கள் பலி: 9 பேர் மாயம்

புதன்கிழமை, 14 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

நாகர்கோவில் : நடுக்கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 3 மீனவர்கள் பலியாகினர். மேலும் மாயமான 9 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

குமரி மாவட்டம் குளச்சல் துறைமுக தெருவைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 38), இவரது மாமனார் தாசன் (60).  இவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு வேம்பூர் பகுதியில் ஜாபர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். இவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 5 மீனவர்களும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 7 மீனவர்களும் சென்றனர். 

கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து 55 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த சிங்கப்பூர் சரக்கு கப்பல் இவர்களது விசைப்படகு மீது மோதியது. இதில் விசைப்படகு கடலில் மூழ்கியது. 

படகில் இருந்த தமிழகத்தை சேர்ந்த வேல்முருகன், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுனில்தாஸ் ஆகிய இருவரையும் கப்பல் ஊழியர்கள் மீட்டனர். 3 பேர் பிணமாகவும் மீட்கப்பட்டனர்.

மற்ற 9 பேர் கடலில் மூழ்கி மாயமானார்கள்.  இதுபற்றி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த இடத்திற்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் மாயமான 9 பேர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மீட்கப்பட்ட 3 பேர் உடல்களும் மங்களாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. 

மீட்கப்பட்டவர்கள் யார்? என்பது குறித்து அடையாளம் காணும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டனர். அப்போது பலியானவர்கள் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் மற்றும் அவரது மாமனார் தாசன் என்பதும், மற்றொருவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள அலெக்சாண்டர் மற்றும் தாசனின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். மாமனார், மருமகன் பலியான சம்பவம் குளச்சல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் மாயமான 9 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. மாயமானவர்களில் 4 பேர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மாயமானவர்கள் குமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. 

மாயமான மீனவர்களை விரைந்து தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவ அமைப்புகளும், மீனவர்களின் குடும்பத்தினரும் கோரிக்கை வைத்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து