முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தடுப்பூசி மேல் பழியை போடக்கூடாது: விவேக்

வியாழக்கிழமை, 15 ஏப்ரல் 2021      சினிமா
Image Unavailable

நடிகர் விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விதிமுறைகளை கடைபிடிக்காமல் கொரோனா தடுப்பூசி மேல் நாம் பழியை போடக் கூடாது என்று தெரிவித்தார். 

நடிகர் விவேக் நேற்று சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அப்போது, சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதன் பின்னர், விவேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி குறித்து பலவித வதந்திகள் பொதுமக்களிடையே உலா வருகின்றன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நமக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. ஆனால், பாதுகாப்பு உண்டு. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மருத்துவமனையில் நான் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன்.  முகக்கவசம், கைகளை அடிக்கடி கழுவுதல், தனிமனித இடைவெளியும் ஆகியவைதான் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு. ஆனால், கொரோனா தடுப்பூசி மட்டும்தான் மருத்துவ ரீதியான ஒரேயொரு பாதுகாப்பு. இதுதான் உயிரைக் காப்பாற்றுகின்ற பாதுகாப்பு.  இதைச் செலுத்திக்கொண்டால் கொரோனா தொற்று வராது என்பதல்ல. வந்தாலும் உயிரிழப்பு இருக்காது. இரு டோஸ் செலுத்திக்கொண்ட இரு வாரங்களுக்குப் பின்புதான் நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் உண்டாகும். அதுவரை நாம் பாதுகாப்பில்லாமல் இருந்து கொரோனா வந்தால் நாம் தடுப்பூசி மேல் பழியை போடக்கூடாது. தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் சமூகப் பாதுகாப்பு வளையத்துக்குள்தான் நாம் இருக்க வேண்டும். 

அரசு மருத்துவமனைகளில் திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர். அவர்களை நம்பி பொதுமக்கள் அனைவரும் சீக்கிரமாக கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும். யாருக்கும் எந்தப் பக்கவிளைவும் ஏற்படவில்லை என்பதுதான் அரசுத் தரப்பில் சொல்லப்படும் தகவல். சமூகப் பாதுகாப்புக்கு கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு விவேக் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து