முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இரவு ஊரடங்கு கொண்டு வரப்படுமா? தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு, இரவு நேரத்தில் ஊரடங்கு கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி அதிகபட்சமாக 6,993 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது.  ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து 7,819 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2,564 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இது மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 10 சதவீத வளர்ச்சியில் கொரோனா பரவல் உள்ளது. 

மேலும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றில் பதில் அளித்த தமிழக அரசு, கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளதாக தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா பரவல் தடுப்புக்காக சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து உள்ளது.  திருமணம், இறுதிச்சடங்கு, மதம் தொடர்பான கூட்டங்கள் உள்பட பல நிலைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு தடுப்பூசி போடுவதிலும் அரசு தீவிரம் காட்டி வருகிறது.  கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. 

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது.  இதுகுறித்த ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் நேற்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார துறை இணை இயக்குனர் செல்வ விநாயகம், வருவாய் துறை அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான மேலும் பல அவசர நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்போடு மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டது. மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகள் அமைத்து துல்லியமாக கண்காணிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது. வர்த்தகம், தொழில் நிறுவனங்கள் பாதிக்காத வகையில் என்னென்ன கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என்றும் விவாதிக்கப்பட்டது.  வார இறுதியில் ஊரடங்கு, இரவு நேரத்தில் ஊரடங்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பொது ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது போல் இல்லாமல் சிறிய அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டது.  மேலும் பாதிப்பு அதிகம் உள்ள 19 மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த எந்த வகையிலான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை தள்ளி வைக்கலாமா? அல்லது திட்டமிட்டபடி நடத்துவதா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் இது குறித்து எடுக்கப்பட்ட முடிவு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து