முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் கட்சியினர், அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்- பீலா ராஜேஷ்

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா ராஜேஷ் கலந்து கொண்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, பொருளாதார சூழ்நிலை பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாநில எல்லைகளில் வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்பட்டு அதில் வருபவர்கள் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். 

வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை பரவி வருவதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 230 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 590 பேருக்கு கொரோனா இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 9 ஆயிரத்து 486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 8 ஆயிரத்து 594 பேர் குணமடைந்துள்ளனர். 773 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 55 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் போதிய அளவில் இருப்பு உள்ளது. வருகிற 15 நாட்கள் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

வருகிற மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மையத்திற்கு வரும் அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து