முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வினேஷ் போகத் - அன்ஷு மாலிக், திவ்யா தங்கப் பதக்கம் வென்றனர்

சனிக்கிழமை, 17 ஏப்ரல் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அல்மாட்டி : ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத், அன்ஷு மாலிக், திவ்யா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

கஜகஸ்தானில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 53 கி.கி., எடைப்பிரிவு முதலிரண்டு சுற்றுகளில் மங்கோலியாவின் ஓட்கான்ஜர்கல் கான்பாடர், சீனதைபேயின் மெங் ஹசுவான் ஹசீக்கை வீழ்த்திய வினேஷ் போகத், அரையிறுதியில் தென் கொரியாவின் ஓ ஹியுன்யங்கை தோற்கடித்தார்.

வினேஷ் போகத்:

அடுத்து நடந்த பைனலில் வினேஷ், சீனதைபேயின் மெங் ஹசுவான் ஹசீக் மீண்டும் மோதினர். இதில் அபாரமாக ஆடிய வினேஷ் 6 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தனது முதல் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் இவர் இதுவரை ஒரு தங்கம் (2021), 3 வெள்ளி (2015, 2017, 2018), 4 வெண்கலம் (2013, 2016, 2019, 2020) என, 8 பதக்கம் வென்றுள்ளார்.

அன்ஷு அபாரம்: 

பெண்களுக்கான 57 கி.கி., எடைப்பிரிவு அரையிறுதியில் தென் கொரியாவின் ஷின்ஹே லீயை வென்ற இந்தியாவின் அன்ஷு மாலிக், பைனலில் மங்கோலியாவின் பேட்செட்செக் அல்டன்ட்செட்செக்கை சந்தித்தார். சமீபத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த அன்ஷு 3 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இவர், கடந்த ஆண்டு டில்லியில் நடந்த இப்போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார்.

சாக்சிக்கு வெள்ளி: 

பெண்களுக்கான 65 கி.கி., எடைப்பிரிவு அரையிறுதியில் தென் கொரியாவின் ஹன்பிட் லீயை தோற்கடித்த இந்தியாவின் சாக்சி மாலிக், பைனலில் மங்கோலியாவின் போலோர்டுங்கலாக் ஜோரிக்ட்டை சந்தித்தார். இதில் ஏமாற்றிய சாக்சி மாலிக் 0 - 4 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.

பெண்களுக்கான 72 கி.கி., எடைப்பிரிவு முதலிரண்டு சுற்றுகளில் மங்கோலியாவின் என்க்பாயர், கஜகஸ்தானின் ஜமிலாவை வீழ்த்திய இந்தியாவின் திவ்யா காக்ரன், 3- வது சுற்றில் 2-0 என, தென் கொரியாவின் சுஜின் பார்க்கை தோற்கடித்தார். மூன்று போட்டியிலும் வென்ற திவ்யா, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இத்தொடரில் பெண்கள் பிரிவில் இதுவரை இந்தியாவுக்கு 4 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என, மொத்தம் 7 பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே சரிதா மோர் (59 கி.கி.,) தங்கம் வென்றிருந்தார். சீமா பிஸ்லா (50 கி.கி.,), பூஜா (76 கி.கி.,) வெண்கலம் கைப்பற்றி இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து