முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி தயாரிப்பு பார்முலாவை பகிர்ந்து கொள்ள வேண்டும் : மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரித்து வருவதை அடுத்து, தடுப்பூசி தயாரிப்பை மத்திய அரசு பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், இரண்டாம், மூன்றாம் அலைகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் இரண்டாவது அலையை எதிர்கொண்டிருக்கும் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்து வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியாவில் 2 நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசிகளைத் தயாரித்து வருகின்றன. அந்த நிறுவனங்களால் ஒரு மாதத்துக்கு 6 முதல் 7 கோடி தடுப்பூசிகளை மட்டுமே தயாரிக்க முடியும். இந்த வகையில் சென்றால், நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியைச் செலுத்த 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும். அதற்குள் பல அலைகள் வந்து விடும். எனவே தடுப்பூசி தயாரிப்பை அதிகரித்து அதற்கான தேசிய திட்டத்தை வகுக்க வேண்டியது அவசியம்.

இதற்கான ஏராளமான நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரிக்க அனுமதிக்க வேண்டும். தற்போது தடுப்பூசியை உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்களிடம் இருந்து தயாரிப்பு பார்முலாவை மத்திய அரசு பெற்று பிற நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும்.  கடினமான இந்தச் சூழலில் மத்திய அரசுக்கு இதற்கான அதிகாரம் உள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். 

டெல்லியில் தினந்தோறும் 1.25 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. விரைவில் தினமும் 3 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தத் தொடங்குவோம். 3 மாத காலத்துக்குள் அனைத்து டெல்லிவாசிகளுக்கும் தடுப்பூசியை செலுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். எனினும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.  இவ்வாறு அதில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து