முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் முயற்சிக்கு அ.தி.மு.க. துணை நிற்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்றார் எடப்பாடி: தமிழக அரசுக்கு அ.தி.மு.க துணை நிற்கும் என உறுதி

புதன்கிழமை, 23 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் முயற்சிக்கு அ.தி.மு.க. துணை நிற்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழக அரசுக்கு அ.தி.மு.க. துணை நிற்கும் என்று உறுதியளித்தார். 

தமிழக சட்டசபை  கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் முதல் கவர்னர் உரை மீதான விவாதங்கள் நடைபெற்றன. விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என்று சொன்னீர்கள், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். நுழைவுத் தேர்வு உள்ளதா இல்லையா என்பதை சொல்லுங்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் வரவில்லை, பழனிசாமி முதல்வரான பிறகு தான் நீட் தேர்வு நுழைந்தது. இதை யாராவது மறுக்க முடியுமா? தமிழ்நாட்டில் நீட் தேர்வு வருவதற்கு முழுக்க முழுக்க காரணம் எடப்பாடி பழனிசாமி தான் என்று குற்றம்சாட்டினார். நீட் தேர்வு தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிய நிலையில் அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்டதை அவையில் எப்போதாவது சொல்லி இருக்கீறீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ஆரம்ப காலம் முதலே எதிர்த்து வருகிறோம். அ.தி.மு.க, தி.மு.க. இணைந்தே தீர்மானம் நிறைவேற்றினோம். சட்ட மசோதா தாக்கல் செய்தோம். ஜனாதிபதிக்கு அனுப்பிய மசோதாவை திருப்பி அனுப்பி விட்டனர். நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முயற்சித்து வருகிறோம். ஒரு முறைக்கு இரண்டு முறை அழுத்தமாக நீட் விலக்குக்காக பிரதமரிடம் பேசியிருக்கிறேன். மாணவர்களின் உயிர் பிரச்சினை என்பதால் நீதிமன்றத்தில் முறையாக அணுக உள்ளோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீட்டை பொறுத்தவரை விலக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். 

விராலிமலை எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான  விஜயபாஸ்கர் பேசும் போது கொரோனா தடுப்பூசி திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும், கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஒரு லட்சம் படுக்கைகளை உருவாக்க வேண்டும்.  ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கூறிய தி.மு.க., தற்போது மாணவர்களுக்கு நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்பதை  சட்டசபையில்  நேரடியாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிக்கு அ.தி.மு.க. துணை நிற்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசும் போது,  நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிக்கு தமிழக அரசுக்கு அ.தி.மு.க துணை நிற்கும். அ.தி.மு.க ஆட்சியில் இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு வர முடியவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை என கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து