முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இல்லாத கட்டுபாடுகள் !

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: ஜப்பானில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக 

ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவில் இதுவரை இல்லாத கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் உடலுறவு கூடாது, மகிழ்ச்சியை கட்டிப்பிடித்து கொண்டாடக் கூடாது, பதக்கம் வாங்கும்போது முகக்கவசம் அவசியம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அடங்கும்.

ஒலிம்பிக் கிராமம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. ஜப்பானிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கட்டுக்குள் இருந்தது. இதனால் போட்டிகளுக்கு கொரோனா அச்சுறுத்தல் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உருமாறிய கொரோனா பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய அளவில் சேதத்தை உண்டாக்கியது. வீரியம் மிக்கதாகவும், விரைவாக பரவக் கூடியதாகவும் உள்ளது.

தற்போது 3-அலை... 

தற்போது 3-அலை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஜப்பானிலும் கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. டோக்கியோ நகரில் ஜனவரி மாதத்திற்குப் பிறகு தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது.

79 ஆயிரம் பேர்... 

ஒலிம்பிக் போட்டியில் 11,500 வீரர்- வீராங்கனைகள் பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப், அதிகாரிகள் என 79 ஆயிரம் பேர் டோக்கியோவில் குவியத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கென ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

வீரர்களுக்கு தொற்று... 

ஒலிம்பிக் கிராமத்தில் ஒவ்வொரு நாட்டின் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்க வேண்டும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எச்சரிக்கை - அபராதம்...

இந்நிலையில் ஒலிம்பிக் கமிட்டி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறும் நபர்களுக்கு எச்சரிக்கை, அபராதம், போட்டியை விட்டு நீக்குதல் என கடுமையான தண்டனை விதிக்கப்படும் என புதிய வழிக்காட்டு நெறிமுறை புத்தகத்தில் தெரிவித்துள்ளது.

கட்டிப்பிடிக்க... 

ஒலிம்பிக் வீரர்கள் யாரும் உடலுறவில் ஈடுபடக் கூடாது. சந்தோசத்தை கட்டிப்பிடித்து கொண்டாடக் கூடாது. ஒலிம்பிக் நகரில் உள்ள உணவுக் கூடங்களில் தனித்தனியாகவே சாப்பிட வேண்டும். பதக்கம் வாங்க செல்லும்போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தினந்தோறும் கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இடைவெளி...

பாலியல் தடையை உடல் அளவிலான தொடர்பை தவிர்த்தல், கட்டிப்பிடித்தல், கைக்குலுக்கல், மற்ற நபர்களுடன் குறிப்பிட்ட இடைவெளியுடன் பேசுதல் என்ற அடிப்படையில் தெரிவித்துள்ளது.

கைவிடப்பட்டது...

1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக்கில் போட்டியில் இருந்து ஆயிரக்கணக்கான இளம் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் போட்டியில் பாதுகாப்பான உடலுறவை வலியுறுத்தி ஒலிம்பிக் கிராமத்திற்கு ஆயிரக்கணக்கான ஆணுறைகள் வழங்கப்பட்டன. டோக்கியோ ஒலிம்பிக்கிலும் 1,60,000 ஆணுறைகள் வழங்கப்பட இருந்தன. அது கொரோனா தொற்றால் கைவிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்...

விளையாட்டில் கலந்து கொள்ளும் வீரர்- வீராங்கனைகள் கட்டாயம் ஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டும். அதில் இரண்டு ஆப்ஸ்களை (Apps) பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். ஒன்று உடல்நிலையை பரிசோதிக்க... மற்றொன்று அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள.. ஸ்மார்ட்போன் இல்லை என்றால், விமான நிலையத்தில் வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம். போன் இல்லாமல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற முடியாது.

BOX -1

ஒரே நாளில் 10 பேருக்கு....

டோக்கியோவில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒலிம்பிக் நிர்வாகி ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 3 வீரர்களுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் மட்டும் போட்டி நிர்வாகிகள் ஐவர், விளையாட்டு வீரர்கள் மூவர், பத்திரிகையாளர், ஒப்பந்தப்பணியாளர் தலா ஒருவர் என மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போது வரை ஒலிம்பிக் பணியில் இருக்கும் 55 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் நிர்வாக கமிட்டி வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து