ஓய்வு பெறும்போது 'கோலி' உயரிய இடத்தில் இருப்பார் யுவ்ராஜ் சிங் புகழாரம்

Yuvraj-Singh 2021 07 20

Source: provided

மும்பை: ஓய்வுப்பெறும்போது கிரிக்கெட்டின் உயரிய இடத்தில் இருப்பார், அதனை பார்க்க நான் காத்திருக்கிறேன் என புகழாரம் சூட்டியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங், மேலும், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெறும்போதுதான் பல வீரர்கள் லெஜண்ட் அந்தஸ்துக்கு உயருவார்கள். ஆனால் கோலி 30 வயதிலேயே அந்த ஸ்தானத்தை எட்டிவிட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்ல வாய்ப்புகள்...

நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த யுவராஜ் சிங் "இந்திய அணிக்குள் நுழைந்தபோதே விராட் கோலி மிகுந்த நம்பிக்கையளிக்கும் வீரராக திகழ்ந்தார். அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி சாதித்தார். அதனால்தான் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. 

ரோகித் - கோலி...

அப்போது ரோகித்துக்கும், கோலிக்கும் இடையேதான் போட்டி இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் கோலி ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தார். அதனால்தான் உலகக் கோப்பை அணியில் இடம் கிடைத்தது, அவரின் கிரிக்கெட் வாழ்க்கையும் மாறியது" என்றார்.

கடின உழைப்பாளி...

மேலும் பேசிய அவர் "கோலி பயிற்சி எடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். அவர் கடினமாக உழைக்கக் கூடியவர். ஆனால் ஒழுக்கமாக பயிற்சியை மேற்கொள்பவர். உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேனாக, தான் வர வேண்டும் என்பதை கோலி விரும்புவார். அதற்கு ஏற்ப உழைத்தார். அதற்கான மனநிலையை அவர் உருவாக்கிக் கொண்டார். 

திறன் மேம்பட்டு...

எல்லோரும் சொல்வதுபோல கேப்டன் பொறுப்பு அவரின் பேட்டிங்கை பாதிக்கவில்லை, மாறாக அவரின் திறன் மேம்பட்டு இருக்கிறது. கேப்டன் பொறுப்பை ஏற்ற பின்புதான் அவர் நிறைய ரன்களை குவிக்க ஆரம்பித்துள்ளார்" என்றார் யுவராஜ்.

இப்போதே லெஜெண்ட்...

தொடர்ந்து பேசிய யுவராஜ் "30 வயதிலேயே நிறைய சாதனைகளை அவர் செய்துவிட்டார். பொதுவாக எல்லோரும் ஓய்வுப்பெறும் காலத்தில்தான் லெஜண்ட் ஆவார்கள். ஆனால் கோலி இப்போதே அந்த இடத்தை எட்டிவிட்டார். அவர் ஓய்வுப்பெறும்போது கிரிக்கெட்டின் உயரிய இடத்தில் இருப்பார், அதனை பார்க்க நான் காத்திருக்கிறேன்" என புகழாரம் சூட்டியுள்ளார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து