ஆயிஷா சுல்தானா மீதான வழக்கு: கேரள ஐகோர்ட்டில் லட்சத்தீவு போலீசார் பிரமாண பத்திரம் தாக்கல்

Ayesha-Sultana 2021 07 21 0

Source: provided

திருவனந்தபுரம்: தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை எதிர்த்து லட்சத்தீவு போலீசார் கேரளா ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள லட்சத்தீவுகளின் நிர்வாக தலைவராக பிரபுல் பட்டேல் செயல்பட்டு வருகிறார். பிரபுல் பட்டேல் தலைமையிலான நிர்வாகம் லட்சத்தீவில் பல்வேறு சட்டத்திருத்தங்களை அமல்படுத்தி வருகிறது. லட்சத்தீவுகளில் பெரும்பான்மை மக்கள் தொகையாக இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் உள்ள நிலையில் நிர்வாகத்தின் சீர்திருத்தங்களுக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பிர்புல் பட்டேலை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக லட்சத்தீவைச் சேர்ந்த பிரபல பெண் டைரக்டரும், நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான ஆயிஷா சுல்தானா, மலையாள டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்றும் பிரபுல் பட்டேலை மத்திய அரசு உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறது என்றும் கூறினார். 

தொலைக்காட்சி விவாதத்தின் போது உயிரியல் ஆயுதம் என தெரிவித்த கருத்து தொடர்பாக ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவு போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்தனர்.  இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் ஆயிஷா சுல்தானா வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஆயிஷா சுல்தானாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதோடு, லட்சத்தீவு போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுல்தானாவிற்கு நிபந்தனை விதித்தது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் 20, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஆயிஷா சுல்தானாவிடம் லட்சத்தீவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், லட்சத்தீவு போலீசார் கேரள ஐகோர்ட்டில் விசாரணை தொடர்பான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர். அதில் ஆயிஷா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், வழக்கு பதிவு செய்த பின்னர் தனது மொபைல் போனில் இருந்த தகவல்களை அழித்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் லட்சத்தீவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து