சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

Periyakaruppan 2021 07 23 0

Source: provided

விழுப்புரம்: சுப்ரீம்கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று  ஊரக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர், கஞ்சனூர், வெங்கந்தூர், வீரமூர், மங்களபுரம், கக்கனூர், காணை ஆகிய கிராமங்களில், புதிய பணிகளைத் தொடங்கிவைத்தும், முடிக்கப்பட்ட பணிகளைத் திறந்தும் வைத்தனர். கக்கனூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஊரகப் பகுதிகள் குறிப்பாக கிராமம், குக்கிராமங்களுக்குச் சென்று நடைபெற்று வருகிற பணிகள் எந்த நிலையில் உள்ளன, தேக்க நிலையில் உள்ள பணிகளை உடனே நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம்.

அதே நேரத்தில், பழைய திட்டங்களில் தேக்கம், குழப்பம் இருப்பதைக் கண்டறிந்து அவற்றையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தி வருகிறோம். மக்களின் வாழ்வாதாரம், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கிற ஒரு துறை ஊரக வளர்ச்சித்துறை என்றால் அது மிகையாகாது.

பெருநகரங்களுக்கு இணையாக குடிநீர், தெருவிளக்கு, தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் கிராமப்புறங்களுக்குக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். நூறுநாள் வேலைத்திட்டப் பணிகளில் உள்ளூர் மக்கள்தான் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு அந்த ஊரின் தேவைகள் என்னவென்று நன்கு தெரியும். அதன்படி தேவையான இடங்களில் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.

காலநிலை மாற்றத்துக்கேற்ப விவசாய சாகுபடி நடந்து வருகிறது. காலத்துக்கு ஏற்றவாறு விவசாயம் மட்டுமின்றி எல்லாவற்றிலும் மாற்றம் வரும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.  இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து