முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் டெஸ்ட் போட்டி: ஜஸ்ப்ரிட் பும்ரா - ஷமி பந்துவீச்சில் 183 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து

வியாழக்கிழமை, 5 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

நாட்டிங்காம்: முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ரா - ஷமி வேக கூட்டணியின் முன் தாக்குப் பிடிக்க முடியாத இங்கிலாந்து அணி, 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பேட்டிங் தேர்வு...

இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நாட்டிங்காம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆரம்பமே அதிர்ச்சி...

ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே ஷாக் கொடுத்தார். ரோரி பர்ன்ஸை ரன் ஏதும் எடுக்காமல் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் செய்தார் பும்ரா. இருப்பினும் நிதான ஆட்டத்தை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கடைபிடித்தனர். இதன் காரணமாக ஜோ ரூட் தவிர்த்து யாருமே சொல்லிக்கொள்ளும் வகையிலான ஸ்கோரை எடுக்கவில்லை.

ரூட் அரை சதம்...

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் தனது 50வது அரை சதத்தை எடுத்தார். பின்னர் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் 64 ரன்களுக்கு நடையை கட்டினார். ஜானி பேர்ஸ்டோ 29 ரன்களும், ஸாக் கிராலே மற்றும் சாம் கரண் தலா 27 ரன்கள் எடுத்தனர். ரோரி பர்ன்ஸ், டேன் லாரன்ஸ், ஜோஸ் பட்லர், ஒலி ராபின்சன் என 4 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.

183 ரன்களுக்கு... 

இறுதியில் 65.4 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து அணி 183 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரன் ரேட் 2.79 ஆக இருந்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்களையும், முகமது ஷமி 3 விக்கெட்களையும், ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்களையும் எடுத்தனர். முகமது சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி எக்ஸ்டிராஸ் வகையில் 13 ரன்களை விட்டுத் தந்திருக்காவிட்டால் இங்கிலாந்து அணியின் ரன் எண்ணிக்கை மோசமாக இருந்திருக்கும்.

இந்தியா 21 ரன்கள்...

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் தலா 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர். போட்டி குறித்து இந்திய வேகப்பந்து வீரர் ‌ஷர்துல் தாகூர் கூறியதாவது:-

முக்கியமானது...

ஜோரூட் விக்கெட்டை கைப்பற்றியது முக்கியமானது. இதேபோல் பேர்ஸ்டோவும் நல்ல நிலையில் ஆடி வந்தார். அவர் சிறந்த நிலைக்கு சென்று விட்டால் அவுட் செய்வது கடினம். இதனால் அவரது விக்கெட்டும் முக்கியமானதாகும். ஆடுகளத்தை பார்த்தால் 4 வேகப்பந்து வீரர்கள் தேவைப்படமாட்டார்கள் என்று நினைத்தோம். இங்குள்ள தட்ப வெப்ப நிலைக்கு டியூக் பந்துகளை வீசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

BOX - 1

காலியாக இருந்த ஓர் இருக்கை

டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கூட்டம் நிரம்பியிருந்த பார்வையாளர்கள் பகுதியில் ஒரேயொரு காலி இருக்கை காணப்பட்டது. அந்த காலி இருக்கை ஜான் கிளார்க் என்பவருக்காக அவரது நண்பர்கள் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் ஜான் கிளார்க் அண்மையில் காலமாகியிருந்தார். 

தீவிர கிரிக்கெட் ரசிகரான ஜான் கிளார்க், கடந்த 40 ஆண்டு காலமாக  டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்காமல் இருந்தது இல்லை. கிரிக்கெட் போட்டியின் மீது ஜான் கிளார்க் கொண்டிருந்த அளவில்லா காதல் மற்றும் பங்களிப்பை நினைவுகூறும் வகையில், மறைந்த அவருக்காக ஒரு இருக்கையை முன்பதிவு செய்து கௌரவித்திருந்தனர். இதனால் தான் அந்த இருக்கை காலியாக இருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து