முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் தடகள வரலாற்றில் சாதனை: ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு முதல் ' தங்கம்' பெற்றுத் தந்தார் நீரஜ் சோப்ரா

சனிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

ஒலிம்பிக் தடகளம் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில்  இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்

நீரஜ் சோப்ரா. இதன் மூலம் ஒலிம்பிக் தடகளப் போட்டியில் முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், நேற்று நடந்த மல்யுத்தத்தில் வெண்கலத்திற்கான போட்டியில் பஜ்ரங் புனியா பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதன் மூலம் நேற்று ஒரே நாளில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் கிடைத்தது. பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் பஜ்ரங் புனியாவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இறுதிக் கட்டத்தை...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 23-ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் ஒலிம்பிக் போட்டி நிறைவடைய உள்ள நிலையில் இந்தியர்களுக்கு நேற்று இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்தது. ஆண்கள் ஈட்டி எறிதல் மற்றும் மல்யுத்தத்தில் 2 பதக்கங்கள் கிடைத்ததே அதற்கு காரணம்.

6 முறை முயற்சி... 

ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் நேற்று நடந்த இறுதி சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இதில் வீரரகள் 6 முறை முயற்சி செய்யவேண்டும் இதில் அதிக தூரம் பதக்கத்திற்கு தேர்வு செய்யப்படும். முதல் 3 சுற்றுகளுக்குப் பிறகு, 12 விளையாட்டு வீரர்கள்  களம் 8 ஆகக் குறைக்கப்படும் பின்னர் 4 பேராக குறைக்கப்படும்.

முதல் இடத்தில்...

இதில் தனது முதல் முயற்சியாக நீரஜ் சோப்ரா 87.03 மீ  எறிந்தார். 2-வது முயற்சியில் 87.58  மீட்டர் எறிந்தார். 3-வது முயற்சியில் 76.79மீட்டர் எறிந்து உள்ளார்.  நீரஜ் சோப்ரா முதல் 4 முயற்சிகளில் முதல் இடம் பிடித்து இருந்தார்.   2-வது இடத்தில் ஜூலியன் வெபர் மற்றும் 3வது இடத்தில் ஜாகுப் வாடிலெஜ் இருந்தனர். 

முதல் வீரர்....

5-வது சுற்றிலும் நீரஜ் சோப்ரா முதல் இடம் பிடித்தார். 6-வது சுற்றிலும் முதல் இடத்தை பிடித்து நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம் இதுவரை நடந்த ஒலிம்பிக்கில் தடகளத்தில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

2-வது இந்திய வீரர்... 

அரியானாவின் பானிபட் மாவட்டத்தில் பிறந்த 23 வயதான நீரஜ் சோப்ரா, அஞ்சு பாபி ஜார்ஜூக்குப் பிறகு உலகத் தரம் வாய்ந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற 2-வது இந்திய விளையாட்டு வீரர் ஆவார். 2016-ம் ஆண்டில் போலந்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப் யு - 20 உலக சாம்பியன்ஷிப்பில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

தங்கப் பதக்கம்...

2016-ம் ஆண்டிலேயே, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 82.23 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் பின்னர், 2017-ம் ஆண்டில், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பிலும் 85.23 மீட்டர் வரை ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார். போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் நடந்த மீட்டிங் சிடாடே டி லிஸ்போவா போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

யார் இந்த நீரஜ்?

சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜூலையில் இந்தியாவின் இளம் ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் ஒருவர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றிருந்தார். உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 86.48 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து ஜூனியர் அளவில் உலக சாதனை படைத்து, தங்க பதக்கமும் வென்றிருந்தார். ஒரே இரவில் தடகள விளையாட்டு உலகில் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்த்தை எட்டினார். அவர்தான் நீரஜ் சோப்ரா.

ஈட்டி எறிதல் பயிற்சி... 

ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் உள்ள காந்த்ரா கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 1997-ல் பிறந்தவர். அவருக்கு தற்போது 23 வயது. பள்ளிப் பருவத்தில் பருமனான உடல் வாகை கொண்டிருந்திருக்கிறார் அவர். 12 வயதில் 90 கிலோ உடல் எடையுடன் இருந்திருக்கிறார். அந்த எடையை குறைக்கும் நோக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில் பயிற்சி பெறத் தொடங்கி உள்ளார். அது நாளடைவில் அவரை தொழில்முறை வீரராக உருவாக்கி உள்ளது.

சில மாதங்கள் காயம்... 

தொடக்கத்தில் உள்ளூர் அளவில் அசத்தியவர் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். 2016-இல் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றதன் மூலம் தனது பதக்க வேட்டையை தொடங்கினார். உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், காமன் வெல்த், ஆசிய விளையாட்டுகள் மாதிரியான முக்கிய போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். இடையில் சில மாதங்கள் காயம் காரணமாக அவர் விளையாடாமல் இருந்தார்.

வெற்றிக்கான போனஸ்...

“எப்போதுமே அனைவரும் பதக்கம் வெல்ல வேண்டும் என மட்டுமே சிந்திக்கிறார்கள். நான் விளையாடும்போது எனது ஆட்டத்தை சரியாக விளையாடி துல்லியமாக ஈட்டியை எறிய வேண்டும் என நினைப்பேன். நான் எனது நோக்கத்தை அடையும்போது அதில் கிடைக்கும் வெற்றிக்கான போனஸ்தான் பதக்கங்கள்” என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் நீரஜ்.

தங்கம் வென்ற நீர்ஜ் சோப்ராவுக்கு ரூ. 6 கோடி ரொக்க பரிசும், அரசு வேலையும் வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

பூனியா வெற்றி...

இதேபோல் நேற்று வெண்கல பதக்கத்திற்கான மல்யுத்த போட்டியில் பஜ்ரங் பூனியா வெற்றிப் பெற்று பதக்கம் வென்றார். ஆடவர் ஃபிரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா மற்றும் கஜகஸ்தானின் தவுலத் நியாஜ்பெகோவ் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் நேற்று மோதினர். இதில், 8-0 என்ற புள்ளி கணக்கில் பூனியா வெற்றி பெற்றுள்ளார்.

மற்றொரு பதக்கம்...

அரையிறுதியில் அஜர்பைஜானின் ஹாஜி அலியேவ் உடன் விளையாடி 5-12 என்ற கணக்கில் பூனியா தோல்வி அடைந்த நிலையில், நேற்று வெற்றி பெற்றுள்ளார்.  இதற்கு முன் நடந்த காலிறுதி போட்டியில் பூனியா, ஈரானின் மோர்தசா கியாசி செகாவை வீழ்த்தினார்.  இதனால் இந்தியாவுக்கு மற்றொரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

47-வது இடத்திற்கு...

நேற்று ஒரேநாளில் ஒரு வெண்கலம், ஒரு தங்கம் வென்றதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளது. பதக்கப் பட்டியலில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் உள்ளிட்ட 7 பதக்கங்களுடன் இந்தியா 65-வது இடத்தில் இருந்து 47-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து