முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளம்பர தூதரான டோனி

வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

தமிழ்நாட்டின் பிரபல காவேரி மருத்துவமனை குழுமத்தின் பிராண்ட் அம்பாசடராக, அதாவது விளம்பரத் தூதராக முன்னாள் இந்திய கேப்டனும் நடப்பு சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.டோனி நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது காவேரி மருத்துவமனையின் வளர்ச்சியும் டோனியின் வளர்ச்சியும் ஒன்று போன்றதே என்கிறது காவேரி நிர்வாகம்.

 

இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் தெரிவிக்கையில்., டோனியும் 20 ஆண்டுகளுக்கும் மேல் மருத்துவச் சேவை புரிந்து வரும் ஒரு நிறுவனத்துடன் விளம்பர தூதராக கூட்டிணைவதில் பெருமையடைகிறேன் என்றார்.

___________

சிகிச்சைக்கு உதவிய வீராங்கனை

கடந்த 2018-ம் ஆண்டு எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வீராங்கனை மரியா, டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த நிலையில், அதே நாட்டைச் சேர்ந்த பிறந்து 8 மாதமே ஆன மிலேசெக் மலிசா என்ற ஆண் குழந்தையின் இருதய அறுவைசிகிச்சைக்கு சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு பணம் தேவைப்பட்டது.

அந்தத் தொகையை ஈட்ட முடியாமல் அவரது பெற்றோர் சமூக வலைதளங்களில் உதவி கோரியதையும் அறிந்த மரியா ஆண்ட்ரேஜிக், தாம் வாங்கிய பதக்கத்தை ஏலம் விட்டுள்ளார். அவரது பதக்கம் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இதை அறிந்த ஏல நிறுவனம் மரியாவின் பதக்கத்தை அவரிடமே திருப்பி வழங்க முடிவு செய்துள்ளது.

________

கே.எல். ராகுலுக்கு கெளரவம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியத் தொடக்க வீரராக கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் டெஸ்டில் 84, 26 என ரன்கள் எடுத்த ராகுல், லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 129 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்தாலோ 5 விக்கெட்டுகளை எடுத்தாலோ ஹானர்ஸ் போர்டில் பெயர் இடம்பெறும். 2014-ல் ரஹானே சதமடித்து ஹானர்ஸ் போர்டில் இடம் பிடித்தார். இம்முறை சதமடித்த காரணத்தால் கே.எல். ராகுலின் பெயர் ஹானர்ஸ் போர்டில் இடம்பெற்றுள்ளது. இதன் புகைப்படம், லார்ட்ஸ் மைதானத்தின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

____________

அமெரிக்க ஓபன்: டொமினிக் விலகல்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 30-ம் தேதி முதல் செப்டம்பர் 12-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான ஆஸ்திரியாவின் டொமினிக் திம் விலகுவதாக அறிவித்தார்.

இது குறித்து 27 வயதான டொமினிக் திம் தனது டுவிட்டர் பதிவில், ‘அமெரிக்க ஓபன் மற்றும் இந்த ஆண்டுக்கான எஞ்சிய சீசனையும் நான் தவறவிடுகிறேன். அமெரிக்க ஓபன் பட்டத்தை தக்க வைக்க முடியாமல் போவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த ஜூன் மாதம் எனது மனிக்கட்டில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை என்று தெரிவித்துள்ளார்.

___________

ஜப்பான் கிராண்ட்பிரி சுற்று ரத்து

இந்த ஆண்டுக்கான ‘பார்முலா1’ கார் பந்தயம் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதுவரை நடந்துள்ள 11 சுற்றுகள் முடிவில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 195 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்த போட்டி தொடரின் 17-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி போட்டி அக்டோபர் 10-ம் தேதி அங்குள்ள சுசுகா ஓடுதளத்தில் நடக்க இருந்தது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இந்த போட்டியை ரத்து செய்வதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்த போட்டி வேறு இடத்தில் நடைபெறுவது குறித்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று ‘பார்முலா1’ போட்டி அமைப்பு குழு தெரிவித்துள்ளது.

___________

உலக தடகளம்: இந்தியாவுக்கு வெண்கலம்

20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கென்யா தலைநகர் நைரோபியில் நடந்து வருகிறது.  இதில் நடந்த கலப்பு அணிகளுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் இறுதிப்போட்டியில் பரத், பிரியா மோகன், சுமி, கபில் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 20.60 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

நைஜீரியா அணி தங்கப்பதக்கத்தையும், போலந்து அணி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றன. 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா வென்ற 5-வது பதக்கம் இதுவாகும்.

__________

தமிழக சிறுமிக்கு உற்சாக வரவேற்பு

போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்திய அணியில் அங்கம் வகித்த கோவையை சேர்ந்த 14 வயது ரிதுவர்ஷினி தங்கப்பதக்கம் வென்றார்.

தற்போது நாடுதிரும்பிய ரிதுவர்ஷினி பேசுகையில், ‘சர்வதேச போட்டியில் இது தான் எனது முதல் வெற்றி. என்னுடைய வெற்றிக்கு நான் மட்டுமின்றி நிறைய பேரின் உழைப்பும் காரணமாகும். உலக இளையோர் போட்டியில் வெற்றி பெற்றது போல் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பட்டத்தை வெல்ல ஆசைப்படுகிறேன். அரை இறுதிப்போட்டியில் இத்தாலியை வென்றோம். இறுதிப்போட்டியில் துருக்கியை வீழ்த்தினோம்’ என்றார்.

____________

ஹைதராபாத் அணியில் நடராஜன்

கடந்தாண்டு ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்கள் நடராஜனுக்கு சிறப்பாகவே அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நடராஜன் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து பார்மெட்களிலும் விளையாடி அசத்தினார். அதன்பின்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன் கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டார்.

இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அவர் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். இப்போது பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் மருத்துவர்களின் கண்காணிப்பில் மெல்ல தன்னுடைய பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார் நடராஜன். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அமீரகம் புறப்படுகிறது. அதில் நடராஜனும் செல்வதாக அந்த அணியின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

__________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து