முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெட்வடேவ்

புதன்கிழமை, 8 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், மெட்வதேவ், ‌ஷபலென்கா அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

 3-வது முறை...

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள மெட்வடேவ், நெதர்லாந்தின் போடிக் சான்ட்ஸ்கல்ப்பை எதிர்கொண்டார். முதல் இரு செட்களை கைப்பற்றிய மெட்வடேவ், 3-வது செட்டை இழந்தார். எனினும் சுதாரித்த அவர் 4-வது செட்டை கைப்பற்றி, தொடர்ந்து 3-வது முறையாக அமெரிக்க ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அலிஸ்மியை... 

மெட்வதேவ் அரை இறுதியில் கனடாவைச் சேர்ந்த அகுர் அலிஸ்மியை எதிர்கொள்கிறார். அவர் கார்லோஸ் அல்காரஸ் கார்பியாவுக்கு (ஸ்பெயின்) எதிரான கால் இறுதியில் 6-3, 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது கார்பியா போட்டியில் இருந்து விலகியதால் அலிஸ்மி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஷபலென்கா... 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இரண்டாம் நிலை வீராங்கனையான ‌ஷபலென்கா (பெலாரஸ்) - 8-வது வரிசையில் உள்ள பார்பரா கிரஜ்கோவா (செக் குடியரசு) மோதினார்கள். இதில் ‌ஷபலென்கா 6-1 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று முதல் முறையாக அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார்.

லேலா பெர்னாண்டஸ்...

மற்றொரு ஆட்டத்தில் கனடாவை சேர்ந்த லேலா பெர்னாண்டஸ் 6-3, 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 5-ம் நிலை வீராங்கனையான எலினா சுவிட்டோலினாவை (உக் ரைன்) அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார். அரைஇறுதி ஆட்டத்தில் ‌ஷபலென்கா - லேலா பெர்னாண்டஸ் மோதுகிறார்கள். 

ஜோகோவிச்...

இதில் 8-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), வைல்டு கார்டு மூலம் வாய்ப்பு பெற்ற 99-ம் நிலை வீரரான அமெரிக்காவின் 20 வயதான ஜென்சன் புரூக்பியை சந்தித்தார்.

பெரேட்டினியை... 

இதில் ஜோகோவிச் 1-6, 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஜென்சன் புரூக்பியை வீழ்த்தி 12-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். கால்இறுதியில் ஜோகோவிச், 8-ம் நிலை வீரரான பெரேட்டினியை (இத்தாலி) எதிர்கொள்கிறார். முன்னதாக பெரேட்டினி 6-4, 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீரரான ஜெர்மனியின் ஆஸ்கர் ஒட்டியை வெளியேற்றினார்.

கரோலினா... 

அதே சமயம் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 7-5, 6-4 என்ற நேர்செட்டில் ரஷியாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவாவை தோற்கடித்து 4-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார்.

மரியா சக்காரி... 

மற்றொரு ஆட்டத்தில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-7 (2-7), 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் 2019-ம் ஆண்டு சாம்பியனான பியான்கா ஆன்ட்ரீஸ்குவை (கனடா) போராடி சாய்த்து முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 3 மணி 30 நிமிடம் நீடித்தது. கால்இறுதியில் சக்காரி, பிளிஸ்கோவாவை சந்திக்கிறார்.

போபண்ணா...

இதற்கிடையில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-குரோஷியாவின் இவான் ரோடிக் இணை 7-6 (7-4), 4-6, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் ராஜீவ் ராம் (அமெரிக்கா)-ஜோ சலிஸ்பரி (இங்கிலாந்து) ஜோடியிடம் தோல்வி கண்டு நடையை கட்டியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து