முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறது என்பது தவறான தகவல்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

திங்கட்கிழமை, 13 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

நீட் தேர்வானது மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறது என்பது தவறான தகவல் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சியாக இருந்தபோதே, தி.மு.க. வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த தி.மு.க., ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், நீட் தேர்வு தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யக் குழு அமைத்தது. அக்குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் இந்தக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று (செப். 13) நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதாவை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து தாக்கல் செய்தார்.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

நீட் என்னும் தேர்வைக் கொண்டுவந்து மருத்துவக் கல்விக் கனவைச் சிதைத்து வரும் மத்திய அரசுக்கு எதிராக கடந்த நான்காண்டு காலமாகத் தமிழகத்தில் மிகக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விலைமதிக்க முடியாத மாணவ, மாணவிகள் தங்களது இன்னுயிரை இந்தப் போராட்டத்துக்குத் தாரைவார்த்து மறைந்து போயிருக்கிறார்கள்.

தொடக்கத்தில் இருந்தே இந்த நீட் தேர்வை தி.மு.க. எதிர்த்து வருகிறது. ஏனென்றால், மாணவர்களுக்குக் கல்வித் தடையை ஏற்படுத்தக்கூடிய நுழைவுத் தேர்வுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்த அரசுதான் தி.மு.க. அரசு.

இதன் தொடர்ச்சியாக, நீட் தேர்வை ரத்து செய்ய, தி.மு.க. அரசு அமைந்தவுடன் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்று தி.மு.க.வினுடைய தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறோம். அதை நிறைவேற்றும் வகையில், மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய இளநிலை மருத்துவக் கல்விச் சேர்க்கைகளை, இனிமேல் 12ஆம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்துவதற்கு ஏதுவாக, வலிமையான சட்டமுன்வடிவினை இப்பேரவையில் நான் முன்மொழிகிறேன்.

தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தோம்.

அரசாணை எண்: 283, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, நாள் 10-6-2021 அன்று இந்தக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவிலே பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடம்பெற்று இருந்தார்கள். இந்த உயர்மட்டக் குழுவின் ஆய்வு வரம்புகளும் வெளியிடப்பட்டன.

பொதுமக்கள் அனைவரிடம் இருந்தும் கருத்துகளை இக்குழு கேட்டுப் பெற்றது. மின்னஞ்சல், கடிதங்கள் மற்றும் ஆணையத்தில் வைக்கப்பட்டிருந்த கருத்துக் கேட்புப் பெட்டியில் போடப்பட்ட மனுக்கள் என ஆணையத்துக்கு பல்லாயிரக் கணக்கானவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள்.

இந்த வழிமுறைகளின் வாயிலாக 86 ஆயிரத்து 342 பேரிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்து, தனது விரிவான பரிந்துரைகளை நீதிபதி ஏ.கே.ராஜன் குழு 14-7-2021 அன்று அரசுக்கு அளித்தது. அந்தப் பரிந்துரைகளில், சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக் கல்வியைப் பெறும் கனவுக்கு இடையூறாகவும், சமூகப் பொருளாதாரத்தில் வளம் மிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து, எம்.பி.பி.எஸ். மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளிலுள்ள பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக, அரசுப் பள்ளியின் மாணவர்கள், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்துக்கும் குறைவாகக் கொண்டுள்ளவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலினப் பழங்குடியினர் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த வசதி குறைந்தவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், எம்.பி.பி.எஸ். மாணவர்களின் தகுதி அல்லது தரத்தினை நீட் தேர்வு உறுதிசெய்வதாகத் தெரியவில்லை எனவும், ஒப்பிடுகையில், குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு மட்டுமே தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு புகுத்தியுள்ளது எனவும் அறிக்கை முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆகவே, 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைச் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 3/2007) போன்றதொரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி, அதற்காக குடியரசுத் தலைவருடைய ஒப்புதலைப் பெறலாம் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த உயர்மட்டக் குழு அளித்த விரிவான பரிந்துரைகளைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள, தலைமைச் செயலாளர் தலைமையில் அரசு செயலாளர்களைக் கொண்ட குழு ஒன்று 15-7-2021 அன்று அமைக்கப்பட்டது. செயலாளர்கள் குழு, 2007-ல் தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டத்தைப் போன்று மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கு நீட் தேர்வினை விலக்குவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு சட்டம் இயற்றி, சட்டப்பேரவையின் ஒப்புதல் பெற்று, அதற்கு குடியரசுத் தலைவருடைய ஒப்புதல் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

நீட் தேர்வானது மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறது என்பதும் தவறானதே. 2017ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே அதிக மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள மாநிலங்களுள் தமிழகம் ஒன்றாக இருந்தது.

இந்த நிறுவனங்களிடமிருந்து பட்டம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவராக விளங்கினர். எனவே, மேல்நிலைப் பள்ளிப் பாடத் திட்டம் போதுமான தரத்தில் இருக்கும் சூழலில், தகுதித் தேர்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சேர்க்கையானது எந்த வகையிலும் கல்வியின் தரத்தைக் குறைத்துவிடாது.

இந்த அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக, மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இன்றைக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பெற்று வரலாற்றுச் சாதனையை நாம் புரிந்திருக்கிறோம். இந்த நீட் தேர்வு விவகாரத்திலும் அனைத்துக் கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பினை நல்கி, சமூக நீதியில் வரலாறு படைத்திட துணை நிற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

 

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து