போர்டு நிறுவனம் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பி.எஸ்

OPS 2021 08 11

Source: provided

சென்னை : போர்டு மோட்டார் நிறுவனம் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், நிலைத்த வேலைவாய்ப்புகளை அளிப்பதிலும், தொழில் முனைவோர் மேம்பாடு அடைவதிலும் நாற்றங்காலாக விளங்குவது, தொழில் துறை மற்றும் அதன் தொடர்புடைய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்தத் துறைகளை ஊக்குவிக்கவும், தொழில் அமைதியை உருவாக்கவும் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார். தொழில்கள் வளர்ந்தால் தான் தொழிலாளர்கள் வாழ முடியும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, புதிது புதிதாக தமிழகத்தில் தொழில்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான போர்டு நிறுவனம், விற்பனை பாதிப்பு மற்றும் தொடர் இழப்பு காரணமாக, சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையை அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் மூடுவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பேரிடியை அளிப்பதாக அமைந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக உற்பத்தி நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், மூலப் பொருட்கள் பற்றாக்குறை என்று கூறப்பட்டாலும், நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்கான தந்திரம் தான் இது என்றும், எப்பொழுது உற்பத்தி தொடங்கப்படும், எப்பொழுது தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லையென்றும் தொழிலாளர்கள் தரப்பில் கூறப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட ஊதிய உடன்படிக்கை ஓராண்டுக்கு மேற்கொள்ளப்பட்ட போதே சந்தேகம் அடைந்து, இது குறித்த கேள்வியை எழுப்பியதாக சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளது. இது குறித்து, கருத்து தெரிவித்த அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர், தொழிற்சாலையை மூடுவது என்பது கடினமான முடிவு தான். எங்களுக்கு இதைத் தவிர வேறு முடிவு தெரியவில்லை. பல்வேறு துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டும், உள்நாட்டில் உற்பத்தி செய்யும் வாகனங்களால் நீண்ட காலத்துக்கு லாபம் ஈட்டும் பாதையை தங்களால் அடைய முடியவில்லை என்று தெரிவித்து இருப்பதாகவும் பத்திரிகையில் செய்தி வெளி வந்துள்ளது.

போர்டு நிறுவனத்தின் இந்த நடவடிக்கை காரணமாக, சுமார் 4,000 நேரடித் தொழிலாளர்களின் எதிர்காலமும், கிட்டத்தட்ட 40,000 மறைமுகத் தொழிலாளர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. இது மட்டுமல்லாமல், போர்டு மோட்டார் நிறுவனத்துக்கு மூலப் பொருட்களை விநியோகித்து வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலைமையும் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், கிட்டத்தட்ட நான்காயிரம் சிறு, குறு நிறுவனங்கள் மூடும் அபாயம் உள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. எனவே, நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படையக்கூடிய இந்தப் பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, போர்டு மோட்டார் நிறுவனம் தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள மறைமலைநகரில் இயங்கவும், தொழிலாளர்கள் தொடர்ந்து அங்கு பணிபுரியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து