விடைபெற்றார் கவர்னர் பன்வாரிலால் புரோகித் : வழியனுப்பி வைத்த அமைச்சர்கள்

Banvaril 2021 09 14

Source: provided

சென்னை : பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து விடைபெற்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை விமான நிலையத்தில் அமைச்சர் பெருமக்கள் வழியனுப்பி வைத்தனர்.  

தமிழகத்தின் 14-வது கவர்னராக மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி பொறுப்பேற்றார்.  சமீபத்தில் இவர் பஞ்சாப் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தமிழக புதிய கவர்னராக நாகாலாந்தில் கவர்னராக இருக்கும் ஆர்.என்.ரவி அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதிய கவர்னர் ஆர்.என்.ரவி சனிக்கிழமை பதவி ஏற்க உள்ளார். இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று தமிழகத்தில் இருந்து விடைபெற முடிவு செய்தார்.  நேற்று முன்தினம் பன்வாரிலால் புரோகித்தை கிண்டி ராஜ்பவனில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பெரியசாமி ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.

நேற்று காலை 7.45 மணிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிண்டி ராஜ்பவனுக்கு சென்று பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். பஞ்சாப் கவர்னராக நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கு அவர் பன்வாரிலால் புரோகித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.  அப்போது முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு கவர்னர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிடம் பன்வாரிலால் புரோகித் நன்றி தெரிவித்து புறப்பட்டார்.

கவர்னர் மாளிகையில் இருந்து விமான நிலையம் வரை பலத்த பாதுகாப்புடன் அவர் அழைத்து செல்லப்பட்டார். பின்னர் சிறப்பு விமானத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார்.  அவரை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, பெரியசாமி ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். தலைமைச் செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து