முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமை செயலக அலுவலர்களுக்கு அறிவுசார் பயிற்சி அளிக்கும் திட்டம் : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 14 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை  : தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் 3,645 அலுவர்களுக்கு அறிவுசார் பயிற்சி அளிக்கும் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.  இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் துவக்கி வைத்தார்.  

அரசு செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கவும், காகிதப் பயன்பாட்டை குறைக்கவும், சிறந்த பணியாளர்கள் கொண்டு ஒரு திறமையான நிர்வாக அமைப்பை உருவாக்கவும், தமிழ்நாடு அரசு  இ - ஆபிஸ் (மின் அலுவலகம்) திட்டத்தை உருவாக்கியுள்ளது. 

தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் மற்றும் இதர அரசு அலுவலகங்களிலும் e-Office நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக  தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் 3,645 அலுவலர்களுக்கு திறன் மற்றும் அறிவுசார் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி 120 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 

e-Office நடைமுறைப்படுத்துவதன் மூலமாக பணியாளர்களின் பணிச்சுமை குறைவது மட்டுமல்லாமல் ஆற்றல் மிகுந்த அரசு இயந்திரத்தை உருவாக்க இயலும். இதனால் அரசு அலுவலகத்தில் கோப்புகள் கையாளுவதில் உள்ள இடர்பாடுகள் களையப்படும். பொதுமக்களுக்கு கிடைக்கும் சேவைகள் விரைந்து வழங்கப்படும் வகையில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியில் டேவிதார்(ஓய்வு), ஆலோசகர் (மின்னாளுகையை எளிமையாக்கல்), தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, நீரஜ் மித்தல், முதன்மை செயலாளர், தகவல் தொழில் நுட்பவியல் துறை,  வெங்கடராமன், கூடுதல் காவல் துறை இயக்குனர் மற்றும் சிறப்பு பணி அலுவலர் (தகவல் தொழில் நுட்பவியல் துறை), விஜயேந்திர பாண்டியன், தலைமை செயல் அலுவலர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, கமல் கிஷோர்    இணை தலைமை செயல் அலுவலர், தமிழ் நாடு மின் ஆளுமை முகமை, ஸ்ரீனிவாச ராகவன், மாநில தகவல் அலுவலர், தேசிய தகவலியல் மையம் மற்றும் இதர துறை அலுவலர்கள் பங்கேற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து