முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் - கேரளா இடையேயான நதிநீர் பிரச்சனை குறித்து 3-ம் கட்ட பேச்சுவார்த்தை

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

தமிழ்நாடு-கேரளா இரு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சனை  மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று காணொலிக்காட்சி மூலம் நடைபெற்றது

தமிழ்நாடு-கேரள மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளுக்கு சுமூகமாகத் தீர்வு காணும் வகையில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவும், பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒரு குழுவும், அமைப்பது என்று இரு மாநில அரசுகளும் முடிவு செய்து குழுக்கள் அமைக்கப்பட்டன. இரு மாநிலக் குழுக்களின் முதல் கூட்டம் சென்னையில் 12.12.2019 அன்றும், இரண்டாவது கூட்டம் திருவனந்தபுரத்தில் 11.09.2020 அன்றும் நடைபெற்றது. 

நேற்று இக்குழுக்களின் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை காணொலிக் காட்சிமூலம் நடைபெற்றது. தமிழகப் பொதுப்பணித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா. தலைமையிலான தமிழ்நாட்டுக் குழுவும், கேரள அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் 

டி.கே. ஜோஸ், தலைமையிலான கேரள மாநிலக் குழுவும், கலந்து கொண்டு, பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். 

இக்கூட்டத்தில் ஆனைமலையாறு திட்டம், நீராறு-நல்லாறு இணைப்புத்திட்டம், பாண்டியாறு-புன்னம்புழா திட்டங்கள் குறித்தும், பேபி அணை மற்றும் முல்லைபெரியார் அணையிலுள்ள 23 மரங்களை அகற்றுவதற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி குறித்தும், வல்லக்கடவு முதல் முல்லைபெரியார் அணை வரை  செல்லும் இணைப்புச் சாலையை மேம்படுத்துதல் குறித்தும், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவிலுள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் நெய்யாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுதல் குறித்தும், பெரியார் அணையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக படகுகள் விடுவது குறித்தும் தமிழ்நாடு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இப்பொருள் குறித்து இரு மாநில அலுவலர்கள் குழு ஆலோசனை மேற்கொண்டனர். 

கேரள மாநிலம் சார்பில் முல்லைபெரியார் அணையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான வாடகை மற்றும் ராயல்ட்டி கட்டணங்கள் குறித்த ஒப்பந்தத்தை புதுப்பித்தல் குறித்தும், பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்தத்தை புதுப்பித்தல் குறித்தும்  கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கைகள் குறித்து இரு மாநில அலுவலர்கள் குழு இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். 

 

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் காவிரி தொழிலநுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன், முதன்மைத் தலைமைப் பொறியாளர், நீர்வளத்துறை கே.இராமமூர்த்தி, நீர்வளத்துறை மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் எம்.கிருஷ்ணன், தலைமைப் பொறியாளர் (திட்டங்கள் வடிவமைப்பு) சி. பொன்ராஜ், கோவை மண்டல தலைமைப் பொறியாளர் கே.அசோகன், பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டக்கோட்டம் கண்காணிப்புப் பொறியாளர் பி.முத்துச்சாமி, அத்திக்கடவு-அவினாசி திட்டக்கோட்ட கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.சிவலிங்கம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக கண்காணிப்புப் பொறியாளர் சங்கர்ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து