சர்வதேச எல்லை பகுதியில் பறந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் விரட்டியடிப்பு

Pakistan 2021 09 18

Source: provided

புதுடெல்லி : சர்வதேச எல்லை பகுதியில் பறந்து பரபரப்பு ஏற்படுத்திய பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்றை படையினர் விரட்டியடித்து உள்ளனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் என்ற பகுதியில் அமைந்த சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆளில்லா விமானம் ஒன்று பறந்துள்ளது.  அந்த ஆளில்லா விமானம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்து உள்ளது.  தரையில் இருந்து ஏறக்குறைய 400 மீட்டர்கள் உயரே பறந்துள்ளது.  இதனை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.  ஒரு சில வினாடிகள் தென்பட்ட இதனை படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்தனர்.

பாகிஸ்தானின் ஊடுருவலை முறியடித்து தக்க பதிலடி கொடுத்து உள்ளனர்.  கடந்த ஏப்ரல் 24-ம் தேதி, ஜம்முவின் ஆர்னியா பிரிவில் நடந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமான ஊடுருவல் முறியடிக்கப்பட்டது.  கடந்த மே 14-ம் தேதி, ஜம்முவின் சம்பா பகுதியில் பறந்த இதேபோன்ற பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று ஏ.கே.-47 ரக துப்பாக்கி, பிஸ்டல் உள்ளிட்ட ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சென்றது. 

இதேபோன்று, கடந்த ஜூன் 26-27 ஆகிய தேதிகளில் இரவில் ஜம்முவின் விமான படை தளத்தில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் தடுத்து நிறுத்தப்பட்டு முறியடிக்கப்பட்டது.  கடந்த ஆகஸ்டிலும், ஹிராநகர் பிரிவில் சர்வதேச எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு ஆளில்லா விமானங்களை அந்த பகுதி மக்கள் கண்டுள்ளனர்.  இதுபோன்ற பல்வேறு ஊடுருவல்களை படையினர் முறியடித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து