அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம்: அமெரிக்கா, ஆஸி மீது பிரான்ஸ் கோபம்

Nuclear submarine 2021 09 19

Source: provided

லண்டன்: இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்க்கொள்ள ஆக்கஸ் என்ற புதிய பாதுகாப்பு கூட்டமைப்பை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் படி ஆஸ்திரேலியாவின் படை பலத்தை அதிகரிப்போம் என்றும் அந்நாட்டுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் கிடைக்க உதவுவோம் எனவும் பிரிட்டனும், அமெரிக்காவும் அறிவித்துள்ளன.

நீர்மூழ்கிக் கப்பல் கிடைப்பது உறுதியானதை அடுத்து  பிரான்ஸ் நாட்டிடம் இருந்து நீர்மூழ்கிக்கப்பலை வாங்க போட்டிருந்த ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா, ரத்து செய்தது. பிரான்சிடம் இருந்து கடந்த 2016 ஆம் ஆண்டே 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, 12 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம் செய்திருந்தது.

திட்டத்தை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பது பிரான்சை கோபம் அடைய செய்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவுடன் நல்ல நட்புறவை கொண்டிருந்த பிரான்ஸ், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இரு நாட்டிலிருந்தும் தனது தூதர்களை திரும்ப பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி கப்பல் கட்டுவது குறித்து, ஆக்கஸ் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு வெறும் 3 மணி நேரங்களுக்கு முன்பே பிரான்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

 

பிரான்சை சமாதானம் செய்ய அமெரிக்கா முயற்சி செய்தாலும், இதுவரை சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கிய பிரான்ஸ், அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கை தங்களை அந்நியப்படுத்திவிட்டதாக கருதுகிறது. பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் அடுத்தடுத்த இந்த நகர்வுகள் சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து