முக்கிய செய்திகள்

கேன் வில்லியம்சன் அபாரம்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத்

Hydrabad-Win 2021 09 28

சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே துபாயில் நடந்த 40-வது ஐ.பி.எல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. டாஸ் வென்ற இந்த அணியால் ஆட்டத்தை வெல்ல முடியவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தபோது தொடக்க வீரர் எவின் லெவிஸ் 4 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வல் 23 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 57 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மூன்று சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் இவரது இந்த ஆட்டம் சிறப்பாக இருந்தும் ராஜஸ்தான் அணியால் பெரும் அளவில் ஸ்கோர் எடுக்க முடியவில்லை. அதற்குக் காரணம் இவரைத் தவிர பிற ஆட்டக்காரர்கள் யாரும் அதிரடியாக ஆடவில்லை.

கடைசிவரை நிலைத்து நின்று ஆடிய சஞ்சு சாம்சன் ஆட்டம் முடிய 4 பந்துகளில் இருந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் சித்தார்த் கௌலின் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டருக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார். 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 164 ரன்களை எடுத்தது.ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து 5 விக்கட்டுக்களில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியின் சித்தார்த் கௌல் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணிக்கு சேசிங் ஒன்றும் அவ்வளவு கடினமானதாக இல்லை. சன்ரைசர்ஸ் தொடக்க வீரர் ஜேசன் ராய் 42 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க வீரர் வ்ருத்திமான் சஹா 16 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக வந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.

 

இறுதியாக ஆட்டம் முடிய 9 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 167 ரன்கள் எடுத்தது ஐதராபாத். இதன் மூலம் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. நடப்பு ஐ.பி.எல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ளது ஐதராபாத் அணி. ஆனால் இந்த போட்டியின் வெற்றி ஐதராபாத் அணிக்கு 2வது வெற்றி. மீதமுள்ள எட்டு போட்டிகளிலும் இந்த அணி தோல்வியையே இதுவரை சந்தித்துள்ளது வெறும் நான்கு புள்ளிகளுடன் தற்போதைய புள்ளிப் பட்டியலிலும் ஐதராபாத் அணி கடைசி இடத்திலேயே இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து